அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க பாமக செயற்குழுவில் தீர்மானம்.!
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து பாமக செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் ஓமந்தூரில் பாமக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மூத்த மகள் காந்திமதி மற்றும் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். ஆனால், கூட்ட அறிவிப்புகளில் அன்புமணி ராமதாஸ் பெயரும், புகைப்படமும் இடம்பெறவில்லை.
கடந்த ஐந்தாம் தேதி தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த நிலையில் இன்று பாமக மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. பாமக மாநில செயற்குழு கூட்டத்தில், தமிழகம் முழுவதிலிருந்தும் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இதில் 108 மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் வன்னியர் சங்கம் சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
அன்புமணி மீது கட்சி விதிகளை மீறியதாகவும், அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த செயற்குழுக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கு அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே ஒமந்தூரார் திருமண மண்டபத்தில் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, பொதுவெளியில் இராமதாஸின் பேச்சுக்கு அன்புமணி கட்டுப்படாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.
பாமக நிறுவனருக்கு களங்கத்தை உருவாக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸ்க்கு முழு அதிகாரம். தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்துவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை.
நிறுவன தலைவருக்கு களங்கம் உருவாக்கும் வகையிலான செயல் கண்டிக்கத்தக்கது. 2026 தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமைக்க இராமதாஸுக்கு அதிகாரம் அளித்து தீர்மானம் என மொத்தம் 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.