பாஸ்போர்ட் இல்லை.. உலக்கோப்பை இருக்கு.? போலி கேப்டன் வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு.!

தன்னை மாற்று திறனாளி வீல்சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என கூறி அண்மையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற வினோத் பாபு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கடந்த வருடம் பாகிஸ்தானில் ஆசிய அளவிலான மாற்றுத்திறனாளிக்கான வீல்சேர் கிரிக்கெட் உலக கோப்பை போட்டி நடைபெற்றதாகவும், அதில் தான் இந்திய அணியை வழிநடாத்தியதாகவும் ராமநாதபுரத்தை சேர்ந்த வினோத் பாபு எனும் மாற்றுத்திறனாளி கூறியிருந்தார். அவர் மாவட்ட ஆட்சியர், அமைச்சர் ராஜகண்ணப்பனை சந்தித்து தனக்கு உதவி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். அதற்கான ஏற்படுகளை செய்வதாக அமைச்சர் செய்வதாக உறுதியளித்தார்.
அதன் பிறகு போட்டியில் வென்றதாக கூறப்பட்ட கோப்பையுடன் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்கவும் வினோத்பாபு சென்றார். அதன் பிறகு தான் உளவுத்துறை இவரின் மேல் உள்ள சந்தேகத்தின் பெயரில் விசாரிக்கையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, அந்த கோப்பை போலி, சான்றிதழ் போலி, இதற்கெல்லாம் மேலாக இவர் பாகிஸ்தான் சென்று விளையாடியதாக கூறியிருந்தார். ஆனால், இவரிடம் பாஸ்போர்ட் கூட இல்லை என்பது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து, ஏ.பி.ஜே., மிஷல் பாரா ஸ்போர்ட்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சரவணக்குமார், செயலர் டேவிட் வின்சென்ட் ராஜா ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி தங்கதுரையிடம் புகார் அளித்தனர். போலி சான்றிதழ், கோப்பை தயார் செய்த வினோத் பாபு மற்றும் அவருக்கு உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், வினோத் பாபுவால் மற்ற மாற்றுதிறனாளி வீரர்களின் வாழ்வும் பாதிக்கப்படும் என்றும் கூறி புகார் அளித்தனர். இந்த புகாரின் பெயரில் தற்போது ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் வினோத் பாபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.