பொன்னியின் செல்வன் சிறப்பு காட்சிக்கு மறுப்பு.! ஏமாற்றத்தில் ரசிகர்கள்…

பொன்னியின் செல்வன் 2 படத்துக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் 2 வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி நாளை பிரம்மாண்டமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது
நாளை வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்க தமிழ்நாடு அரசு மறுத்துவிட்டது. இப்படத்தின் முதல் பாகம் அதிகாலை 4 மணி முதலே காட்சிப் படுத்தப்பட்டன. ஆனால், இரண்டாம் பாகத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது ஏன் என்பது குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை. மேலும், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இதனை கண்காணிக்க வேண்டும் என்று அந்தந்த மாவட்டாட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல் காட்சி காலை 9 மணிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ரசிகர்கள் பெரும் சோகத்தில் இருப்பதை விட, ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அதாவது, இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு ரிலீஸான வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களுக்கு நள்ளிரவு காட்சி திரையிடப்பட்டது. நள்ளிரவு காட்சியின் போது, சென்னையில் துணிவு திரைப்பட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஒரு இளைஞர், லாரி மேல் இருந்து தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், நள்ளிரவு மற்றும் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி தமிழ்நாடு அரசு மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.