உயிருக்கு ஆபத்து.., டிஜிபிக்கு கடிதம்.! சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் ஆயுதப்படை பாதுகாப்பு!
அஜித்குமார் வழக்கில் முக்கிய ஆதாரமான வீடியோவை பதிவு செய்த சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த சக்தீஸ்வரனுக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு அவரது கோரிக்கையின் பேரில் தமிழ்நாடு டி.ஜி.பி. அலுவலகத்தால் உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, அஜித்குமார் தாக்குதலை படம் பிடித்த அறநிலையத்துறை ஊழியர் சக்தீஸ்வரன் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு கடிதம் எழுதிருந்தார். ”எங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று நீதிபதியே கூறியுள்ளார். ஆனால் புகார் கொடுத்தும் இன்னும் பாதுகாப்பு கொடுக்கவில்லை, வெளியே செல்லவே பயமாக இருக்கிறது.
வீடியோ பதிவு செய்து வெளியிட்டதால் மிரட்டல் வருகிறது, மன உளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். மனசாட்சி இருப்பதால்தான் வீடியோவை வெளியிட்டேன். அஜித்தை நான் தாக்கியதாகக் கூட சிலர் கூறுகின்றனர், எனக்கும் என்னை சுற்றியுள்ளவர்களுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். கைதான காவலர் ராஜா தனக்கு ஏற்கனவே மிரட்டல் விடுத்ததாகவும் சக்தீஸ்வரன் குற்றச்சாட்டிருந்தார்.
இந்நிலையில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக சக்தீஸ்வரன் டிஜிபி அலுவலகத்தில் பாதுகாப்பு கோரியிருந்த நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருப்புவனம் காவல் நிலையத்திலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுவதுடன், ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படையிலிருந்து இரண்டு காவலர்கள் திருப்புவனத்திற்கு வருகை தந்துள்ளனர்.