“சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன்” – கண்ணீர் மல்க சூளுரைத்த ராஜேந்திர பாலாஜி.!
எடப்பாடி பழனிசாமியின் பிரசார முகமாக உள்ளதால் தன்னை சிலர் குறிவைப்பதாக கூறி, சிவகாசி அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கண்கலங்கியபடி பேசியுள்ளார்,

சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவேன் என கண்ணீர் மல்க அறிவித்தார்.
கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “சிவகாசி எனது மண். என்னை எம்எல்ஏவாகவும் அமைச்சராகவும் ஆக்கியது இந்த மண். எனவே நான் வேறு தொகுதியில் போட்டியிட மாட்டேன். வரும் தேர்தலில் சிவகாசி தொகுதியில்தான் போட்டியிடுவேன். வரும் தேர்தலில் என்னை எதிர்த்து யார் நின்றாலும் நான் உங்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவேன்.
எடப்பாடி பழனிசாமியின் பிரச்சார முகமாக இருப்பதால் தன்னை குறிவைத்து திமுக அரசு பொய் வழக்குகள் பதிவு செய்து கைது செய்து மிரட்ட முயன்றதாகவும், ஆனால் அதிமுகவை ஒருபோதும் காட்டிக் கொடுக்க மாட்டேன்” எனவும் ஆவேசமாக பேசினார்.
சிவகாசி தொகுதியில் 2011 மற்றும் 2016 தேர்தல்களில் வெற்றி பெற்ற அவர், 2021ல் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதையடுத்து, மீண்டும் சிவகாசியில் போட்டியிட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.