ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நீதிமன்றம் எந்தொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வரும் நிலையில், 7 பேர் விடுதலைக்கு ஒப்புதல் கேட்டு அந்த அரசாணையை தமிழக அரசு ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தற்பொழுது வரை ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளிக்காமல் வருகின்றார்.
இந்தநிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ரவிச்சந்திரன், தன்னை விரைவாக விடுவிக்க நடவடிக்கை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு விசாரணையின் போது, 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு நீதிமன்றம் எந்தொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது எனவும், இவர்களின் விடுதலை தொடர்பான முடிவு, ஆளுநர் ஒப்புதலுக்காக உள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி, 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் இருப்பதாக தமிழக அரசு வாதாடிய நிலையில், நளினி மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது போல, ரவிச்சந்திரன் மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு வாதாடியது. இந்த மனு தொடர்பாக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர் பதில்மனு தாக்கல் செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.