அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணி?

எஸ்.பி வேலுமணியை அதிமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Hero Image

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இன்று சட்டமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் அதிமுகவின் உட்கட்சி பூசல் வெளிப்படையாகத் தெரிய வந்தது.ஏற்கெனவே தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் சட்டமன்றத்துக்கு வருகை தந்த எடப்பாடி பழனிசாமியைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் தனியாக வருகை தந்தனர். இது அதிமுகவில் இரு அணிகள் இருப்பதை தெளிவாகக் காட்டியது.

பதவியேற்பின் எடப்பாடி பழனிசாமி உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது சிலர் மட்டுமே மேஜையைத் தட்டி வரவேற்றனர். ஆனால், எஸ்.பி. வேலுமணி உறுதிமொழி ஏற்றுக்கொண்டபோது பல எம்எல்ஏக்கள் உற்சாகமாக மேஜையைத் தட்டி வரவேற்றனர். இந்தக் காட்சி அதிமுகவில் உள்ள உட்கட்சி பூசலை பகிரங்கப்படுத்தியது.

கடந்த இரண்டு நாட்களாக தனித்தனியே ஆலோசனை நடத்தி வந்த அதிமுக எம்எல்ஏக்கள், தற்போது இரு அணிகளாக பிரிந்துள்ளனர். எஸ்.பி. வேலுமணியை அதிமுக சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்துள்ள நிலையில், சட்டமன்றக் குழுத் தலைவர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. எடப்பாடி பழனிசாமியா? அல்லது வேறு ஒருவரா? என்பது இன்னும் தெளிவாகவில்லை.வரும் 13ஆம் தேதி புதிய அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில், அ.தி.மு.க. யாருக்கு ஆதரவு அளிக்கப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த நிலை அதிமுகவுக்குள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.