Sathankulam: சாத்தான்குளம் வழக்கு – ஸ்ரீதர் ஜாமீன் மனு தள்ளுபடி!

கடந்த 2022ம் ஆண்டில் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து, காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு மதுரை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெற வேண்டும் என்பதால் ஜாமீன் வழங்க கோரி உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் ஸ்ரீதர் மனு தாக்கல் செய்திருந்தார். ஜாமீன் மனு மீதான விசாரணையில் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து மதுரை கிளை.
இந்த நிலையில், சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது. காவல் ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என சிபிஐ, ஜெயராஜின் மனைவி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைதான முன்னாள் காவல் உதவி ஆய்வாளர் ரகு கணேஷின் ஜாமீன் மனுவை 5வது முறையாக தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்போது காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமீன் கோரிய மனுவை ஐகோர்ட் கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.