“என்னைய சமாளிக்க முடியல., அந்த பொம்பளைய கூப்டு வராங்க..” சீமான் ஆவேசம்!
நாளை நான் தர்மபுரி போகிறேன். அதனால் விசாரணைக்கு ஆஜராக முடியாது என ஓசூரில் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

சென்னை : நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரின் பெயரில் சென்னை வளசரவாக்கம் போலீசார் சீமான், விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என ஏற்கனவே கூறியிருந்தனர். ஏற்கனவே அளிக்கப்பட்ட சம்மனில் சீமான் ஆஜராகாததால் இன்று, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என வீட்டில் சம்மன் ஒட்டப்பட்டது.
அந்த சம்மனை யாரோ ஒருவர் கிழித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சம்மனை கிழித்தது தொடர்பாக போலீசார் நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டில் விசாரிக்க சென்ற போது அங்குள்ள காவலாளி அமல்ராஜ் (முன்னாள் ராணுவ வீரர்) தான் வைத்திருந்த துப்பாக்கியை போலீசாரிடம் காட்டியதாக தெரிகிறது. இதில் போலீசுக்கும், காவலாளிக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பிறகு காவலாளி அமல்ராஜை போலீசார் கைது செய்தனர்.
இதனை அடுத்து நடிகை வழக்கில், சீமான் நாளை காலை வளசரவாக்கம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் கூறப்பட்டுள்ளதாகவும், மீறினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து தற்போது சீமான் ஓசூரில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ” அம்மையார் ஜெயலலிதா பொறுப்பில் இருந்த போதும், எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பில் இருந்த 10 ஆண்டுகளில் இவர்கள் (போலீசார்) வரவில்லை. இவர்கள் (திமுக) வரும்போது மட்டும் போலீஸ் வருவாங்க. அடுத்து தேர்தல் வரும் போதும் இந்த பொம்பளைய (விஜயலட்சுமி) கூப்பிட்டு வருவாங்க.
பெரியார் விஷயத்துல வாங்குன அடியில் என்ன செய்வது என இவர்களுக்கு தெரியவில்லை. என்னை இவங்களால சமாளிக்க முடியல. உடனே அந்த நடிகையை கூப்பிட்டு வந்துடறாங்க. இந்த வழக்கை நான் தான் போட்டேன். இதனை முடித்து விடுங்கள் என கோரிக்கை வைத்தேன். நீதிமன்றத்தில் விசாரித்து விட்டு தான் தீர்ப்பெழுத வேண்டும். ஆனால் விசாரிக்கும் முன்னரே உத்தரவிட்டனர். புகார் கொடுத்த தரப்பிடம் ஆதாரம் கேட்க வேண்டும், விசாரிக்க வேண்டும். ஆனால், இவங்க நினைக்கும் போதெல்லாம் அந்த பொம்பளய கூப்பிட்டு வந்துடறாங்க. ” என சீமான் பேசினார்.
அவரிடம், நாளை வளசரவாக்கத்தில் நேரில் ஆஜராகும்படி போலீசார் சொல்லி இருப்பது பற்றி கேட்கையில், அதற்கு பதில் அளித்த சீமான், நாளை நான் தர்மபுரியில் கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்க போகிறேன். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக்குவதற்கு என்ன அவசரம்? நீங்க கூப்பிட்டதும் நான் தான் வருவேன்ல. ஏற்கனவே வந்திருக்கேன்ல? இதெல்லாம் நான் அசிங்கபட போறேனு செய்யுறீங்களா? சரி, நாளைக்கு இல்லைனா நாளை மறுநாள வரப்போறேன். நாளைக்கு வரவில்லை என்றால் என்ன செய்வீங்க? நான் இங்க தானே இருக்கேன். எங்கேயும் ஓடி ஒளியவில்லை.
சம்பந்தப்பட்ட அந்த பொம்பளையையும் கூப்பிட்டு வாங்க, அவங்க தரப்பு விஷயத்தையும் கேப்போம், பிறகு நானும் பேசுறேன். அவங்க ஒன்னு சொல்ல, பிறகு அத கேட்டுவிட்டு நீங்க ஒன்னு சொல்ல வேண்டி வரும். என்னைய சமாளிக்க முடியலைன்னா அந்த பொம்பளைய கூப்பிட்டு வந்துடறாங்க..” என சீமான் செய்தியாளர்களிடம் கூறினார்.