செந்தில் பாலாஜி பதவி விலக தேவையில்லை – சபாநாயகர் அப்பாவு

செந்தில் பாலாஜி அமைச்சராக தற்போது இருந்து வருகிறார் என்று சபாநாயகர் அப்பாவு பேட்டி.
தமிழ்நாடு ஆளுநர் நிர்பந்தப்படுத்துவதற்காக செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். ஆவடியில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சபாநாயகர் அப்பாவு, இவ்வாறு தெரிவித்து, செந்தில் பாலாஜி அமைச்சராக தற்போது இருந்து வருகிறார் என கூறினார்..
இதற்கு முன்பு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையை ஏற்க மறுத்த, ஆளுநரின் செயல்பாடு குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்களின் இலாகாவை மாற்ற முதலமைச்சருக்கே அதிகாரம் உள்ளது. வழக்கு இருப்பதாலேயே ஒருவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்க தேவையில்லை எனவும் கூறியிருந்தார்.
2010ல் அமித்ஷா சிறையில் இருந்தபோது இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார். அமித்ஷா வருகையின்போது மின்தடை ஏற்பட்டதற்கு அவர் கோபப்பட்டு இதனை செய்வதாக சிலர் கூறுகின்றனர். எடுத்தோம், கவிழ்த்தோம் என ஆளுநர் செயல்படுவது சரியான நடவடிக்கை அல்ல என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இலாகா மாற்றுவது குறித்து ஆளுநர் என்ஆர் ரவிக்கு முதலமைச்சர் பரிந்துரை கடிதம் அனுப்பியிருந்தார். இதற்கு விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பிய ஆளுநர், அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை ஏன் குறிப்பிடவில்லை என கேள்வி எழுப்பியிருந்தார்.
முதலமைச்சரின் பரிந்துரையை ஆளுநரை திருப்பி அனுப்பியதற்கு திமுக உள்ளிட்ட அதன் கூட்டணி கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். பின்னர் மீண்டும் ஆளுநருக்கு முதலமைச்சர் பரிந்துரை கடிதத்தை அனுப்பினார். அமைச்சர் செந்தில் பாலாஜி கவனித்து வந்த இரு துறைகளான மின்சாரத்துறை மற்றும் மது விலக்கு ஆயத்தீர்வை துறைகளை, இரு வேறு அமைச்சர்களுக்கு மாற்றிக் கொடுக்கும் முதல்வரின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
ஆனால், செந்தில் பாலாஜி குற்றவியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் அமைச்சராக தொடர முடியாது எனவும் ஆளுநர் தெரிவித்திருந்தார். இருப்பினும், செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என திமுக அரசு அறிவித்தது. மறுபக்கம், செந்தில் பாலாஜி பதவி நீக்க வேண்டும், அமைச்சராக தொடர கூடாது என எதிர்க்கட்சி தெரிவித்து வருகிறது. இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து விலக தேவையில்லை என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.