மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் முதலமைச்சர் – இபிஎஸ் கண்டனம்

Edappadi Palanisamy

தொழில் துறைக்கு முதலீடுகளை ஈர்த்தல்’ என்ற பெயரில் மீண்டும் இன்ப சுற்றுலா மேற்கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சருக்கு கடும் கண்டனம்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், பொய்யான வாக்குறுதிகளை அளித்து, பின் வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த திமுக அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில், பொதுமக்களுக்கு பணப் பலன் அளிக்கக்கூடிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல், புதிய திட்டங்களையும் தொடங்காமல், “கமிஷன், கலெக்ஷன், கரப்ஷன்” செய்வதிலேயே முதலமைச்சரின் மொத்தக் குடும்பமும் மும்முரமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

திமுக அரசின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், “குறுகிய காலத்தில், முதலமைச்சரின் மகனும், மருமகனும் அடித்த 30,000 கோடியை எங்கு பதுக்குவது என்று தெரியாமல் தவிப்பதாக” ஒப்புதல் வாக்குமூலம் அளித்தது, இந்த ஆட்சியின் ஊழலை பறை சாற்றுகிறது.

மக்களை நம்ப வைத்து, வாக்குப் பதிவு முடிந்த அடுத்த நாளே தன் சுயரூபத்தைக் காட்டி, தன் குடும்ப உறுப்பினர்கள் அனைவருடனும் தனி விமானத்தில் மதுரைக்கும், அங்கிருந்து கொடைக்கானலுக்கும் இன்பச் சுற்றுலா சென்று வந்தவர்தான் திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின்.

பிறகு ஆட்சிக்கு வந்தவுடன், தொழில் முதலீடுகளை ஈர்க்கச் செல்வதாக கூறி, தன் குடும்பத்துடன் தனி விமானத்தில் துபாய்க்கு இன்பச் சுற்றுலா சென்றார் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின். ஒருசில நிறுவனங்களுடன் தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டதாக அறிவித்தார். 6,000 கோடி முதலீடுகள் வரும் என்று வாயால் வடை சுட்டார். இது நடந்து முடிந்து 700 நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை எந்த முதலீடும் வந்ததாகத் தெரியவில்லை.

இவர்கள் தங்கள் குடும்பத்தின் ஊழல் பணத்தை முதலீடு செய்யச் சென்றார்கள் என்று மக்களிடையே எழுந்த புகார் குறித்து இதுவரை முதலமைச்சர் தகுந்த விளக்கம் அளிக்கவில்லை. தொழில் சுற்றுலா என்று முதலமைச்சருடைய மகன் மற்றும் அவரது மருமகன் ஆகியோர் மாறிமாறி லண்டன் மற்றும் வெளிநாடுகளுக்குப் பறந்து செல்வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஏற்கெனவே குடும்பத்துடன் துபாய் இன்பச் சுற்றுலாவை மேற்கொண்ட முதலமைச்சர் இப்போது, மீண்டும் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு தொழில் முதலீடு ஈர்ப்பு என்ற பெயரில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா மேற்கொண்டுள்ளார்.

முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 30 ஆயிரம் கோடி ரூபாய் குறித்து பேசிய ஆடியோ டேப் லீக் ஆனவுடன், மருமகனும், மகனும் பதறிப் போய் உடனடியாக லண்டன் சென்று வந்தனர். தொடர்ந்து முதலமைச்சர் இன்று சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து தமிழ் நாட்டிற்கு வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கப் போகிறாரா? அல்லது முதலீடு செய்யப் போகிறாரா? என்று தமிழக மக்களும், சமூக ஊடகங்களும் கேள்வி எழுப்பியுள்ளன என்றுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்