திருவள்ளூர் ரயில் தீ விபத்து.., தீயை முழுமையாக அணைத்தும், மீண்டும் தீ.!
தீயணைப்பு வீரர்கள் 6 முதல் 7 மணி நேரம் போராடி, நுரை வகை தீயணைப்பு மூலம் தீயை முழுமையாக அணைத்தனர்.

சென்னை : திருவள்ளூர் அருகே ஏகாட்டூரில் இன்று அதிகாலை 5:20 மணியளவில் சென்னை துறைமுகத்தில் இருந்து ஜோலார்பேட்டைக்கு எரிபொருள் (டீசல்) ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரயிலின் மூன்று வேகன்கள் தடம் புரண்டு எரிபொருள் கசிவு ஏற்பட்டதால் தீ பற்றியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தீயணைப்பு வீரர்கள் 6 முதல் 7 மணி நேரம் போராடி, நுரை வகை தீயணைப்பு மூலம் தீயை முழுமையாக அணைத்தனர். 85% தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும், பின்னர் முழுமையாக அணைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர்.
ஆனால், தீயை முழுமையாக அணைத்த பிறகும், மீண்டும் டீசல் கசிவு ஏற்பட்டு தீ எரிந்து வருகிறது. இது எரிபொருள் கசிவு மற்றும் எஞ்சிய பொருட்களால் ஏற்பட்டிருக்கலாம். 52 டேங்கர்களில் 14 முதல் 18 வரை தீயில் சேதமடைந்தன, இதனால் சுமார் 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் நாசமானதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், தண்டவாளங்கள் மற்றும் மின் கம்பிகளை சீரமைக்கும் பணிகள் நடைபெறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்துக்கான முழு காரணம் குறித்து விசாரணை தொடர்கிறது. 200 மீட்டர் தொலைவுக்கு தண்டவாளங்கள் மற்றும் மின்சார கம்பிகள் பாதிக்கப்பட்டன.
சென்னை-அரக்கோணம் வழித்தடத்தில் ரயில் சேவைகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன, இதனால் வந்தே பாரத், சதாப்தி விரைவு ரயில்கள் உள்ளிட்ட பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் வசதிக்காக திருவள்ளூரில் இருந்து சென்னை மற்றும் அரக்கோணத்துக்கு 10 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.