தூத்துக்குடி அதிர்ச்சி: விளாத்திகுளத்தில் மாணவி உடல் ஒப்படைப்பு!

தூத்துக்குடி விளாத்திகுளத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட மாணவியின் உடல் ஒப்படைப்பு

Vilathikulam Case news

தூத்துக்குடி :மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி +2 படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியது. மாணவியின் உடல் காட்டுப் பகுதியில் பல்வேறு காயங்களுடன் கிடந்த நிலையில் மீட்கப்பட்டது.குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 9 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். “கொலையாளி கைது செய்யப்படும் வரை உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம்” என்று அவர்கள் உறுதியாக அறிவித்து, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் உடலை வைத்திருந்தனர்.

சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்கள் மாநிலம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன.இந்நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தர்ம முனீஸ்வரனை கைது செய்தனர். கைது செய்யப்பட்டதை அடுத்து, மாணவியின் உடலை பெற்றோர் இன்று பெற்றுக்கொண்டனர். உடல் ஒப்படைப்பு நிகழ்ச்சியில் கிராம மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி எஸ்பி மதன் விளக்கம் அளித்தபோது, “அறிவியல் பூர்வமான விசாரணை, சிசிடிவி காட்சிகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். கிராமத்தில் 800-க்கும் மேற்பட்ட ஆண்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல் குற்றவாளியை கண்டறிந்தோம். உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுப்போம்” என்று உறுதியளித்தார்.

இந்த கைது மற்றும் உடல் ஒப்படைப்பு மாணவியின் குடும்பத்தினருக்கும் கிராம மக்களுக்கும் பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது. 9 நாட்கள் நீடித்த போராட்டத்திற்கு பிறகு நீதி கிடைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் வழக்கு இன்னும் விசாரணை நிலையில் உள்ளதால், முழு உண்மைகள் வெளியாகும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இந்த சம்பவம் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு மற்றும் சட்டம்-ஒழுங்கு குறித்து மீண்டும் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது.