தமிழகத்தில் மேலும் இருவர் உயிரிழப்பு..பாதிப்பு 1,500-ஐ தாண்டியது.!
தமிழகத்தில் 1,477 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக அதிகரித்துள்ளது. இன்று கொரோனாவுக்கு மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர். ஏற்கனவே யரிழப்பின் எண்ணிக்கை 15 ஆக இருந்த நிலையில், தற்போது 17 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் 46 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 457 ஆக உள்ளது.
இதையடுத்து இன்றும் மட்டும் 6,109 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை தமிழகத்தில் 47,710 பேரின் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா சிகிச்சையில் 1043 பேர் தற்போது உள்ளனர் என்றும் தமிழகத்தில் உயிரிழப்பின் விகிதம் 1.1% ஆகவும், குணமடைந்தவர்களின் விகிதம் 30% ஆகவும் இருக்கின்றது. இன்று சென்னையில் மட்டும் 18 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 303 ஆக உயர்ந்துள்ளது. மேலும் முதல் முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி தவிர தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரவியுள்ளது. இதையடுத்து மலிவான அரசியலை திமுக தலைவர் ஸ்டாலின் கைவிட வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனமே பாராட்டும் வகையில் தமிழக அரசு செயல்படுகிறது என கூறினார். இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் கொரோனாவால் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை தடுத்து நிறுத்தாதீர்கள், தடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், 20 பேர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.