எண்ணூர் ஆற்றில் 2,150 கிலோ மீன்கள் செத்து மிதந்தது ஏன்?அமைச்சர் ராஜீவ் விளக்கம்!

எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த நிலையில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் விளக்கம் அளித்தார்.

Hero Image

சென்னை : எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்த விவகாரம் தொடர்பாகச் சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். ஆற்றில் கழிவுகள் கலப்பதால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசு உடனடியாகத் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் சட்டமன்றத்தில் விளக்கம் அளித்தார். அவர் பேசுகையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து கிடப்பதாகத் தகவல் தெரிவித்தார். உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மீட்புக் குழுவினர் காலை எட்டு மணிக்கே சம்பவ இடத்திற்குச் சென்று இரயில்வே பாலம், கால்வாய், கொசஸ்தலை ஆறு சேரும் பகுதி, எண்ணூர் முகத்துவாரம், காட்டுப்பாக்கம் மற்றும் என்.சி.டி.பி (NCTPS) குடிநீர் வெளியேறும் பகுதி உள்ளிட்ட ஐந்து முக்கிய இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில், இரயில்வே பாலம் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய பகுதிகளில் நீரில் கரந்துள்ள ஆக்ஸிஜன் அளவு (Dissolved Oxygen) ஒரு லிட்டருக்கு நான்கு மில்லிகிராமிற்குள் இருக்க வேண்டியது போய், இரண்டாகக் குறைந்துள்ளது கண்டறியப்பட்டது. நீரில் ஆக்ஸிஜன் அளவு கடுமையாகக் குறைந்ததே மீன்கள் இறந்து மிதப்பதற்கு முக்கியக் காரணமாகும்.

சுற்றியுள்ள தொழிற்சாலைகளின் கழிவுகளோ அல்லது நச்சு வாயுக்களோ ஆற்றில் கலந்ததா எனச் சோதிக்கப்பட்டதில், அந்த மாதிரியான பாதிப்புகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும், முன்பைப் போல எண்ணெய் படலங்கள் எதுவும் பரவவில்லை என்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்துள்ளது. மாறாக, மனிதக் கழிவுகள் மற்றும் கழிவுநீர் அதிக அளவில் கலந்ததன் காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது.

ஆற்றில் இறந்த சுமார் 2,150 கிலோ எடையுள்ள மீன்கள் சென்னை மாநகராட்சியின் ஒத்துழைப்போடு சுற்றுச்சூழல் பாதிக்கப்படாத வகையில் உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டன. மேலும், நீர் மாதிரிகள் மற்றும் இறந்த மீன்கள் பரிசோதனைக்காகச் சென்னை மீன்வளத்துறை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து முழுமையாக விசாரிப்பதற்காக, மீன்வளத்துறை இணை இயக்குநர் ஆலிவ் ரச்சல், மீன்வளக் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் அருணா, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் இணைச் சுற்றுச்சூழல் பொறியாளர் மணிமேகலை மற்றும் மீன்வள ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் கொண்ட நால்வர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பத்துக் நாட்களுக்குள் தங்களது விரிவான அறிக்கையைச் சமர்ப்பிப்பார்கள் என்றும், அதன் அடிப்படையில் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கத் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தனது பதிலில் தெரிவித்தார்.

எண்ணூர் ஆற்றில் 2,150 கிலோ மீன்கள் செத்து மிதந்தது ஏன்?அமைச்சர் ராஜீவ் விளக்கம்!