அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!
சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா? என அஜித் மரண வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்விகளை முன் வைத்துள்ளது.

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு புகாரில் 2025 ஜூன் 27 அன்று காவல் நிலைய விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாக வெடித்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் (FIR), “அஜித்குமார் காவலர்களிடமிருந்து தப்ப முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு இறந்தார்,” எனக் கூறப்பட்டது இந்த வழக்கில் மேலும் கேள்விகளை எழுப்பியுள்ளது. இது ஒரு புறம் இருக்க மற்றொரு பக்கம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் 2025 ஜூன் 29 அன்று நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அவரது உடலில் 18 இடங்களில் கடுமையான வெளிப்புற காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதாக வெளியான தகவல் இந்த வழக்கை மேலும் பேசுபொருளாக வெடித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஐந்து காவலர்கள் ராஜா, சங்கரமணிக்கண்டன், ராமச்சந்திரன், பிரபு, ஆனந்த்—கைது செய்யப்பட்டனர். அதைப்போல, மேலும் ஆறு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படியான சூழலில்,தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது.
நகை காணாமல் போன வழக்கில் போலீசார் ஏன் FIR பதியவில்லை? யாருடைய உத்தரவின் பேரில் விசாரணை சிறப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டது? சிறப்பு படையினர் தாங்களாகவே வழக்கை கையில் எடுத்து விசாரிக்கலாமா? எனவும், எஸ்பி ஆஷிஸ் ராவத்தை அவசர அவசரமாக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது ஏன்? எனவும் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அது மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் வந்த தகவலை பார்த்து 2 மணி நேரத்தில் தனிப்படை விசாரணையை துவங்கியதா? போலீசார் மாமூல் வாங்கும் ஏராளமான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் உள்ளன. 2 மணி நேரங்களில் விசாரிப்பீர்களா? அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? என்றும் காட்டத்துடன் கேள்விகளை முன் வைத்துள்ளது.
மேலும், புலனாய்வு செய்வதற்கே காவல்துறை, முழு உண்மையையும் சொல்ல தமிழக அரசு மறுக்கிறது. அதைப்போல, சி.சி.டி.வி காட்சிகளில் இருந்து மறைக்க வெளியிடங்களுக்கு கொண்டு சென்று இளைஞர் அஜித்தை அடித்து துன்புறுத்தியதா போலீஸ்? 2 நாட்களாக வேறு வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விசாரிக்கும் அதிகாரத்தை சிறப்பு படைக்கு கொடுத்தது யார்? காவல்துறை, நீதித்துறையை சேர்ந்தவரின் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக் கொலை செய்தாலும் போலீசார் இப்படி தான் நடந்து கொள்வார்களா? எனவும் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளது.