“விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை”…எடப்பாடி பழனிசாமி கருத்து!
மதுரை பாஜக முருக மாநாட்டுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மதுரை : மாவட்டத்தில் ஜூன் 22, 2025 அன்று நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாடு (முருக பக்தர்களின் ஆன்மிக மாநாடு) தமிழக பாஜக மற்றும் இந்து முன்னணி இணைந்து ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட நிகழ்வாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு, மதுரை அம்மா திடலில் நடைபெறவுள்ளதாகவும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் பங்கேற்பார்கள் எனவும் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
மாநாட்டில் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மற்றும் ஆந்திரபிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாண் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர். கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது அவரிடம் பாஜக முருக பக்தர்கள் மாநாடு குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதில் அளித்த அவர் ” விரும்பும் தெய்வங்களை வழிபடுவது ஜனநாயக உரிமை. அந்த அடிப்படையில் மதுரை பாஜக முருக மாநாட்டுக்கு வாழ்த்துகள்,” என்று அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து அவரிடம் ஆங்கிலத்தில் பேசுபவர்கள் விரைவில் வெட்கப்பட வேண்டிய காலம் விரைவில் வரும் என அமித்ஷா பேசியிருக்கிறார் இது குறித்து உங்க கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிசாமி ” அது அவருடைய கருத்து. அவருடைய கருத்தை அவர் சொல்லியிருக்கிறார். ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கிறது. அந்த அடிப்படையில் அவர் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
தாய்மொழி என்பது முக்கியம் என்று சொல்லியிருக்கிறார். அனைவர்க்கும் தாய் மொழி என்பது மிக மிக முக்கியம் என்று சொல்லிருக்கிறார். அந்த தாய் மொழிக்கு கொடுக்கவேண்டிய முக்கியத்துவத்தை ஆங்கிலத்திற்கு கொடுக்குறீர்கள் என்று பொருள்பட தான் அவர் இந்த விஷயத்தை சொல்லிருக்கிறார்” எனவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.