“31 பேர் பலி., பழி வாங்குவோம்! இந்திய ராணுவத்தை தாக்குவோம்!” பாகிஸ்தான் சபதம்!
ஆபரேஷன் சிந்தூரில் 31 பாகிஸ்தான் மக்கள் உயிரிழந்ததாகவும், அதற்கு பாக். ராணுவம் பதில் தாக்குதல் நடத்தும் என்றும் அந்நாட்டு உயர் பதவி பொறுப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட இந்த தாக்குதலானது காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக அமைந்தது.
பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதால் பாகிஸ்தான் அதற்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் பயங்கரவாதிகள் முகாம்களை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்பட்டாலும், பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை ஊடுருவி தாக்குதல் நடத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் 70 – 80 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறினாலும், பாகிஸ்தான் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என கூறப்பட்டது. ஆனால், இதனை பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது. ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் மக்கள் 31 பேர் உயிரிழந்ததாகவும், 46 பேர் காயமடைந்ததாகவும் ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து பாக். ராணுவ செய்தி தொடர்பாளர் கூறுகையில், ” அப்பாவி பாகிஸ்தான் பொதுமக்கள் உயிரிழந்ததற்கும், எங்கள் நாட்டு இறையாண்மையை மீறியதற்கும் நாங்கள் பழிவாங்குவோம். அதற்கான முடிவை தேர்ந்தெடுக்கும் நேரம் இது. விரைவில் தாக்குதல் நடத்துவோம். ” என கூறியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் கூறுகையில், ” நேற்று இரவு இந்தியா செய்த தவறுக்கு, இப்போது விலை கொடுக்க வேண்டியிருக்கும். ஒருவேளை நாங்கள் பின்வாங்குவோம் என்று அவர்கள் (இந்தியா) நினைத்திருக்கலாம். ஆனால், இது துணிச்சலான நாடு என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள்.” என பாக். பிரதமர் கூறினார்.
பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப், ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பாக். ராணுவம் இந்திய இராணுவ இலக்குகளை மட்டுமே தாக்கும். பொதுமக்களை நாங்கள் தாக்க மாட்டோம் என்று கூறினார்.