அமெரிக்கா தாக்கியதில் எங்கள் அணு உலை மையங்கள் ரொம்ப சேதம்! ஒப்புக்கொண்ட ஈரான்!

ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மைல் பாக்ஹாய் எங்கள் அணு உலை மையங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

israel iran war trump

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே 12 நாட்களாக போர் நீடித்த நிலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. இதில் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தும் விதமாக அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக நேரடியாகவே களத்தில் இறங்கி ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல்களால் ஈரான் அணு உலை மையங்கள் பெருமளவு சேதமடைந்ததாக முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த ஜூன் 22-ஆம் தேதி அன்று, அமெரிக்காவின் B-2 குண்டுவீசி விமானங்கள் ‘பங்கர்-பஸ்டர்’ குண்டுகளைப் பயன்படுத்தி, ஈரானின் மூன்று முக்கிய அணு உலை மையங்களான ஃபோர்டோ, நடான்ஸ், மற்றும் இஸ்ஃபஹான் மீது தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதல்கள், ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை குறிப்பிடத்தக்க வகையில் பின்னடைவு செய்ததாக அமெரிக்க அதிகாரிகள் கூறினாலும், ஈரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மைல் பாக்ஹாய், அல் ஜசீராவிடம் பேசுகையில், “எங்கள் அணு உலை மையங்கள் பெருமளவு சேதமடைந்துள்ளன அதில் சந்தேகமில்லை,” என்று கூறினார்.

இந்த அறிவிப்பு, ஈரானின் அணு உலை மையங்களின் சேதத்தின் அளவு குறித்து முரண்பட்ட மதிப்பீடுகள் எழுந்துள்ள நிலையில் வந்துள்ளது. அதே சமயம், ஈரானின் அணு உலை மையங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியப் பங்கு, தாக்குதல்களுக்கு முன்பாகவே பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இதனால், அணு உலை மையங்களில் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் பெரும்பகுதி அழிக்கப்படவில்லை என்று சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், ஃபோர்டோ மையத்தில் உள்ள சென்ட்ரிஃபியூஜ்களுக்கு (யுரேனியத்தை செறிவூட்டுவதற்கு பயன்படும் கருவிகள்) குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டிருக்கலாம் என்று சர்வதேச அணுசக்தி முகமை (IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸ்ஸி கூறியுள்ளார்.  மேலும், இந்தத் தாக்குதல்களால் அணு உலை மையங்களுக்கு வெளியே கதிரியக்க மாசு ஏற்படவில்லை என்று ஈரானிய அதிகாரிகளும் IAEA-யும் உறுதிப்படுத்தியுள்ளன.

அதே சமயம், ஈரானின் அணு உலை மையங்களுக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு குறித்து முரண்பட்ட கருத்துக்களும் இருந்து வருகிறது. ஏனென்றால், ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தத் தாக்குதல்கள் ஈரானின் அணு உலை மையங்களை “முற்றிலுமாக அழித்துவிட்டன” என்று கூறினார். ஆனால், சில அறிக்கைகள், ஃபோர்டோ மையத்தின் நிலத்தடி கட்டமைப்புகள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்றும், ஈரானின் அணு ஆயுதத் திட்டம் சில மாதங்களுக்கு மட்டுமே பின்னடைவு அடையும் என்றும் கூறுகின்றன.

மேலும், இந்தத் தாக்குதல்களுக்கு முன்பு, இஸ்ரேல் ஜூன் 13, முதல் ஈரானின் அணு உலை மையங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வந்தது, இது இரு நாடுகளுக்கு இடையேயான நீண்டகால மோதலை மேலும் தீவிரமாக்கியது. இந்தத் தாக்குதல்களுக்கு பதிலடியாக, ஈரான் இஸ்ரேலின் தெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களை நோக்கி ஏவுகணைகளை ஏவியது. இப்படி மாறி மாறி தாக்குதல் நடைபெற்று வந்த நிலையில், 12 நாளாக போர் நீடித்தது. பிறகு, நேற்று முன்தினம் இரண்டு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்த ஒப்பந்தம் பேசப்பட்டு தற்போது அங்கு பதற்றம் மெல்ல மெல்ல குறைந்திருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்