ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரத் தாக்குதலில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

Pak vs afg

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய கொடூரமான தாக்குதலில் குறைந்தது 400 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 250க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் தலைநகர் காபுலில் உள்ள ஓமித் மறுவாழ்வு மருத்துவமனை மீது நடத்தப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் துணை அரசு செய்தித் தொடர்பாளர் ஹம்துல்லா ஃபிட்ரத் தெரிவித்தார்: “திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் மருத்துவமனை மீது விமானத் தாக்குதல் நடத்தப்பட்டது. 2000 படுக்கை வசதி கொண்ட இந்த மருத்துவமனையின் பெரும் பகுதி முற்றிலும் இடிந்து விழுந்தது.” மருத்துவமனையில் அட்மிஷன் ஆகியிருந்த நோயாளிகள், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்று அச்சம் எழுந்துள்ளது.இந்த தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அரசு நேரடியாக குற்றம்சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவும் எல்லைப் பிரச்சினை, தாலிபான் ஆட்சிக்கு எதிரான பாகிஸ்தானின் நிலைப்பாடு மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பான பதற்றமே இந்த தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. பாகிஸ்தான் கடந்த பிப்ரவரி மாதத்தில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக “திறந்த போர்” என்று அறிவித்த பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது.

இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல்வேறு சர்வதேச அமைப்புகள் இந்த தாக்குதலை வன்மையாக கண்டித்துள்ளன. குறிப்பாக, மருத்துவமனை மீது நடத்தப்பட்ட தாக்குதல் மனிதாபிமானத்துக்கு எதிரான செயல் என்று சர்வதேச அமைப்புகள் விமர்சித்துள்ளன.

ஆப்கானிஸ்தான் அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் மருத்துவமனை பெரும் அளவில் சேதமடைந்துள்ளதால், போதிய மருத்துவ வசதி கிடைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதல் ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இந்த சம்பவம் மத்திய கிழக்கில் நடைபெறும் போர் பதற்றத்துக்கு இணையாக உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மீது குற்றம் சாட்டும் நிலை தொடர்வதால், பிராந்திய அமைதி மேலும் சீர்குலையும் அபாயம் உள்ளது.

ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல் – 400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!