உங்களுக்கு 50 நாள் டைம் போரை நிறுத்தலைனா வரி தான்! ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!
50 நாட்களில் உக்ரைனுடன் போர் நிறுத்தம் செய்யாவிட்டால் 100 சதவீத வரி விதைப்போம் என ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வாஷிங்டன் : 2025 ஜூலை 14 அன்று, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வாஷிங்டனில் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டுடன் நடந்த சந்திப்பில், உக்ரைனுடனான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தாவிட்டால் ரஷ்யாவுக்கு எதிராக 100 சதவீத ‘இரண்டாம் நிலை வரி’ (secondary tariffs) விதிக்கப்படும் என்று கடுமையாக எச்சரித்தார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடனான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றமின்மை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய டிரம்ப், உக்ரைனுக்கு ‘உயர்தர’ ஆயுதங்களை, நேட்டோ நாடுகளின் செலவில், அனுப்புவதாகவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு, உக்ரைன்-ரஷ்யா போரில் டிரம்பின் அணுகுமுறையில் முக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.
டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், “நாங்கள் ரஷ்யாவைப் பற்றி மிகவும் அதிருப்தி அடைகிறோம். 50 நாட்களுக்குள் ஒரு உடன்பாடு ஏற்படவில்லை என்றால், 100 சதவீத இரண்டாம் நிலை வரிகளை விதிப்போம்” என்று கூறினார். இந்த வரிகள், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளை குறிவைக்கும்.
உதாரணமாக, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கினால், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் இந்திய பொருட்களுக்கு 100% வரி விதிக்கப்படும், இது இந்தியாவின் வருவாயை பாதிக்கும் மற்றும் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதை நோக்கமாகக் கொண்டது. டிரம்ப், “புடினுடன் நிறைய பேசுகிறேன், உரையாடல்கள் மிகவும் இனிமையாக இருக்கின்றன. ஆனால், அவர் பேச்சுக்கு பிறகு மிசைல்களை ஏவுகிறார். இது எதுவும் பயனில்லை” என்று வெளிப்படையாக விமர்சித்தார்.
அது மட்டுமின்றி, உக்ரைனுக்கு வலிமையான ஆயுதங்களை, வானில் இருந்து தாக்குதலை தடுக்கும் பேட்ரியாட் குண்டுகள் உட்பட, அனுப்புவதாக டிரம்ப் உறுதியளித்தார். இதற்கு ஜெர்மனி, கனடா, இங்கிலாந்து போன்ற நேட்டோ நாடுகள் பணம் கொடுக்கும். “இந்த ஆயுதங்கள் உக்ரைனுக்கு மிகவும் தேவை,” என்று அவர் கூறினார். நேட்டோ தலைவர் ரூட்டே, “ரஷ்யா இந்த எச்சரிக்கையை சீரியசாக எடுக்க வேண்டும்” என்று ஆதரவு தெரிவித்தார்.டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுடன் பலமுறை பேசியதாகவும், ஒவ்வொரு முறையும் உடன்பாடு ஏற்பட்டாலும், புடின் உக்ரைனில் தாக்குதலை தொடருவதாகவும் கூறினார். “பேச்சுக்குப் பின் கீவ் நகரில் குண்டுகள் விழுகின்றன. இந்தப் போர் நிறுத்தப்பட வேண்டும்,” என்று அவர் விரக்தியுடன் கூறினார்.
50 நாட்கள் அவகாசம் கொடுத்தாலும், ரஷ்யா இந்த காலத்தில் பல தாக்குதல்களை நடத்தலாம் என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கின்றனர். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, டிரம்பின் ஆதரவுக்கு நன்றி கூறினார். டிரம்பின் தூதருடனான பேச்சு பயனுள்ளதாக இருந்ததாகவும் கூறினார். முன்பு, “24 மணி நேரத்தில் போரை முடிப்பேன்” என்று டிரம்ப் கூறியது நகைச்சுவையாக இருந்ததாக இப்போது விளக்கினார். இந்த 100% வரி மற்றும் ஆயுத உதவி, போரை முடிவுக்கு கொண்டுவர உதவுமா என்று தெரியவில்லை, ஆனால் இது உலக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.