AsianGames2023: மகளிர் அணி அசத்தல்!! துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம்!

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் மேலும் ஒரு வெள்ளிப் பதக்கம் வென்று இந்திய மகளிர் அணி அசத்தியுள்ளது.
சீனாவின் ஹாங்சோவ் நகரில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 23ம் தேதி தொடங்கிய 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் அக்.8 வரை நடைபெறுகிறது.
கால்பந்து, கிரிக்கெட், கைப்பந்து, படகுபந்தயம் உள்ளிட்ட சில போட்டிகள் ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இன்று (செப்டம்பர் 29) வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியான துப்பாக்கிச் சுடுதலில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஈஷா சிங், பாலக், திவ்யா ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்றது.
மூவரும் 1731 புள்ளிகளுடன் முடித்தனர். ஈஷா 579 புள்ளிகளுடன் முடிக்க, அதன் பின்னரே பாலக் 577 புள்ளிகளைப் பெற்றார். மறுபுறம், திவ்யா 575 புள்ளிகளுடன் 10-வது இடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறத் தவறினார்.
தற்போது நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஈஷா சிங் பெற்ற மூன்றாவது பதக்கம் இதுவாகும். முன்னதாக, பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதற்கு முன், குழு போட்டியில் மனு பாக்கர் மற்றும் ரிதம் சங்வானுடன் இணைந்து தங்கப் பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் அதிக பதக்கங்கள் வென்ற என்ற சாதனையை இந்திய அணி முறியடித்தது. 2006ஆம் ஆண்டு தோஹாவில் நடைபெற்ற துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா 14 பதக்கங்களை வென்றது. ஆடவருக்கான 5 ரைபிள் 3 பொசிஷன்ஸ் தங்கம் வென்று இந்தியா சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.