மகளிர் உலக செஸ் சாம்பியன் .., 19 வயதில் வரலாறு படைத்த திவ்யா தேஷ்முக்.!
ஜார்ஜியாவில் நடைபெற்ற மகளிர் செஸ் உலகக் கோப்பை ஃபைனலில் இந்திய வீராங்கனை திவ்யா (19) வாகை சூடியுள்ளார்

ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்தார். 19 வயதான இந்த இளம் செஸ் வீராங்கனை, ஜார்ஜியாவின் பாட்டுமியில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவின் மூத்த வீராங்கனை கொனேரு ஹம்பியை டை-பிரேக்கரில் வீழ்த்தி இந்தப் பட்டத்தை வென்றார்.
முன்னதாக, இருவருக்கும் இடையே நடைபெற்ற முதல் 2 சுற்றுகள் டிராவாகின. இன்று நடைபெற்ற டை பிரேக்கர் சுற்றில் கோனேரு ஹம்பியை வீழ்த்தி இந்தியாவின் தங்க மங்கையாக உருவெடுத்துள்ளார் திவ்யா. இதன் மூலம், மகளிர் செஸ் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும், சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனையையும்பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மகளிர் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடருக்கான கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பங்கேற்கவும் திவ்யா தகுதி பெற்றுள்ளார்.
இந்தப் போட்டியில் இரு இந்திய வீராங்கனைகள் இறுதிப் போட்டியில் மோதியது மகளிர் செஸ் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாகும், இதன் மூலம் இந்தியாவுக்கு முதல் உலகக் கோப்பை பட்டம் உறுதியானது. திவ்யாவின் இந்த சாதனை இந்திய மகளிர் செஸ்ஸில் ஒரு மைல்கல் ஆகும், மேலும் இளம் வீராங்கனைகளுக்கு உத்வேகமாக அமைந்துள்ளது.