நார்வே செஸ் : உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்!

நார்வே செஸ் தொடரின் ஆறாவது சுற்றில் குகேஷ் உலகின் நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சென்-ஐ வீழ்த்தினார்

Norway Chess

நார்வே : செஸ் தொடர் 2025, நார்வேயில் உள்ள ஸ்டாவஞ்சர் நகரில் மே 26 முதல் ஜூன் 6 வரை நடைபெற்று வருகிறது. இந்த மதிப்புமிக்க சர்வதேச செஸ் போட்டியில் உலகின் முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த உலக செஸ் சாம்பியன் டி.குகேஷ், நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், அமெரிக்காவின் பேபியானோ கருவானா, ஹிகாரு நகமுரா, இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி மற்றும் சீனாவின் வெய்யி ஆகியோர் மோதி வருகின்றனர்.

தலை சிறந்த செஸ் வீரர்கள் இந்த தொடரில் விளையாடி வருவதால் உலகில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக குகேஷ் மற்றும் கார்ல்சன் இடையேயான போட்டிகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. இந்தத் தொடரின் ஆறாவது சுற்றில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 19 வயது உலக சாம்பியன் குகேஷ், உலகின் நம்பர் 1 வீரரான மேக்னஸ் கார்ல்சனை எதிர்கொண்டார்.

இந்தப் போட்டி மிகவும் பரபரப்பாக நடைபெற்றது. குகேஷ், கிளாசிக்கல் செஸ் வடிவில் முதல் முறையாக கார்ல்சனை வீழ்த்தி, 3-0 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றார். இந்த வெற்றி, குகேஷின் திறமையையும், அவரது உறுதியான மன உறுதியையும் உலக அரங்கில் மீண்டும் நிரூபித்தது. போட்டியின் போது, குகேஷ் ஆரம்பத்தில் பின்தங்கிய நிலையில் இருந்தார், ஆனால் கார்ல்சனின் நேரக் கட்டுப்பாட்டில் ஏற்பட்ட பதற்றத்தைப் பயன்படுத்தி, அவருக்கு எதிராக வாய்ப்பை உருவாக்கினார்.

கார்ல்சன் ஒரு முக்கியமான தவறு (blunder) செய்ததை குகேஷ் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி, ஆட்டத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். இந்த வெற்றி, குகேஷின் முதல் கிளாசிக்கல் வெற்றியாக கார்ல்சனுக்கு எதிராக அமைந்தது, இது செஸ் உலகில் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தத் தொடரில் குகேஷின் பயணம் சவால்கள் நிறைந்ததாக இருந்தது. ஏனென்றால், முதல் இரு சுற்றுகளில் கார்ல்சன் மற்றும் இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசியிடம் தோல்வியடைந்த குகேஷ், அடுத்தடுத்து மூன்றாவது மற்றும் நான்காவது சுற்றுகளில் ஹிகாரு நகமுரா மற்றும் பேபியானோ கருவானாவை வீழ்த்தி வெற்றிப் பாதைக்குத் திரும்பினார். ஆறாவது சுற்றில் கார்ல்சனை வீழ்த்தியது, அவரது தன்னம்பிக்கையை மேலும் உயர்த்தியுள்ளது, மேலும் இந்தத் தொடரில் அவரது அடுத்தகட்ட ஆட்டங்களுக்கு எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

குகேஷின் இந்த வெற்றி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்திய செஸ் உலகிற்கே பெருமை சேர்க்கும் தருணமாக அமைந்துள்ளது. பலரும் சமூக வலைத்தளங்களின் மூலம் அவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்