ChessWorldCup: பட்டத்தை தட்டப்போவது யார்..? இன்று “டை பிரேக்கர்”..! டிராவானால் அடுத்து நடப்பது என்ன..?

FIDEWorldCup2023Final

உலக கோப்பை செஸ் தொடர் போட்டியானது அஜர்பைஜான் நாட்டில் உள்ள பாகு என்ற  நகரில் நடைபெற்று வருகிறது. மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான இந்திய கிராண்ட் மாஸ்டர் ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, இறுதி போட்டிக்கு முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

தமிழக வீரர் பிரக்ஞானந்தா 20 ஆண்டுகளுக்கு பின் செஸ் உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருக்கிறார். இந்த செஸ் தொடரின் அரையிறுதி போட்டியில், உலகளவில் மூன்றாம் இடத்தில் உள்ள வீரரான அமெரிக்காவின் பேபியோனா கருணாவை 3.5-2.5 புள்ளிகள் அடிப்படையில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

முதல் சுற்று ஆட்டம்:

அதன்படி, நேற்று முன்தினம் நடைபெற்ற இறுதிப் போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் பிரக்ஞானந்தா, உலக அளவில் முதல் இடத்தில் இருக்கும் நார்வேயைச் சேர்ந்த மேக்னஸ் கார்ல்சனுடன் மோதினார். முதல் சுற்று ஆட்டத்தில் வெள்ளை நிறக் காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, கார்ல்சனின் நகர்வுகளை உண்ணிப்பாக கவனித்து, தனது காய்களை நகர்த்தினார்.

மேக்னஸ் கார்ல்சன் தனது 13வது நகர்வில் 27 நிமிடங்கள் யோசித்து காயை நகர்த்தினார். இதே போல பிரக்ஞானந்தா 14வது நகர்விற்கு 17 நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். இறுதியில் 78 வது காய் நகர்தலில் முதல் சுற்று முடிவடைந்த நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் 1/2 புள்ளிகளைப் பெற்றனர். இதனால் முதல் சுற்று டிராவில் முடிவடைந்துள்ளது.

இரண்டாவது சுற்று:

இதைத்தொடர்ந்து நேற்று இரண்டாவது சுற்று நடைபெற்றது. இந்த இரண்டாவது சுற்றில் பிரக்ஞானந்தா கருப்பு காய்களுடன் பங்கேற்றார். கார்ல்சன் வெள்ளை நிறக் காய்களுடன் தனது நகர்வைத் தொடங்கினார். கார்ல்சன் E4 காயை நகர்த்த, பிரக்ஞானந்தா E5 காய் நகர்த்தலுடன் இரண்டாம் சுற்று போட்டியானது தொடங்கியது. இருவரும் ஆட்டம் தொடக்கம் முதலே விறுவிறுப்பாக விளையாடினர்.

இரண்டாம் சுற்று முடிவடைந்த நிலையில், பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவரும் 1/2 புள்ளிகளைப் பெற்றுள்ளனர். இதனால் இன்றைய இரண்டாம் சுற்று ஆட்டமும் டிராவில் முடிவடைந்துள்ளது. நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டமும் டிராவில் முடிந்தது. இருவரும் 1 புள்ளிகளுடன் சம நிலையில் உள்ளனர்.

டை பிரேக்கர் ஆட்டம்:

இந்த நிலையில் உலக கோப்பை செஸ் தொடரின் வெற்றியாளரைத் தேர்வு செய்வதற்கான “டை பிரேக்கர்” (Tie Breaker) சுற்று இன்று நடைபெறுகிறது. இந்த டை பிரேக்கர் சுற்று ஆனது ரேபிட் முறைப்படி நடக்கும். இதனால் போட்டிகள் குறிப்பிட்ட நேரத்திற்குள் விளையாடி முடிக்கப்பட வேண்டும். இந்த டை பிரேக்கர் சுற்றில் இரண்டு போட்டிகள் நடைபெறும்.

இதன் முதல் போட்டியில் பிரக்ஞானந்தா வெள்ளை நிறக் காயுடனும், கார்ல்சன் கருப்பு நிறக் காயுடனும் விளையாடுவார்கள். அந்த வகையில் முதல் சுற்றில் இருவருக்கும் தலா 25 நிமிடங்கள் வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக 10 வினாடிகள் வழங்கப்படும். இந்த சுற்றும் டிராவில் முடிந்தால் டை பிரேக்கரின் இரண்டாவது ஆட்டம் நடைபெறும்.

அதில் இருவருக்கும் பத்து நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் 5 வினாடிகள் தரப்படும். அதிலும் ஆட்டத்தின் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் டை பிரேக்கரின் 3வது சுற்று நடைபெறும். அதற்கு பிரக்ஞானந்தா மற்றும் கார்ல்சன் இருவருக்கும் ஐந்து நிமிடங்கள் வழங்கப்படும் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக மூன்று வினாடிகள் வழங்கப்படும்.

அடுத்து நடப்பது என்ன.?

இந்த மூன்று சுற்றிலும் வெற்றியாளர் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால் “சடன் டெத்” அதாவது ப்ளிட்ஸ் என்கிற முறையில் ஆட்டம் நடைபெறும். இதில் ஒரே ஒரு போட்டி நடக்கும். இதற்கு இருவருக்கும் மூன்று நிமிடங்கள் வழங்கப்படும், ஒவ்வொரு நகர்வுக்கும் கூடுதலாக ஒரு வினாடி வழங்கப்படும். இந்நிலையில் இந்த சுற்றில் யார் வெற்றி பெறுகிறாரோ அவரே உலகக் கோப்பை செஸ் தொடர் போட்டியின் சாம்பியன் என்று அறிவிக்கப்படுவார். எனவே, இன்று நடக்கக்கூடிய டை பிரேக்கர் சுற்று ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்