போட்டிக்கு நடுவே மோதல்...சமாதானம் ஆன சஞ்சு - கிளாசன்!

சிஎஸ்கே - எஸ்ஆர்ஹெச் போட்டியில் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு, சஞ்சு சாம்சன் ஹென்ரிச் கிளாசனுடனான தனது பகையை முடிவுக்குக் கொண்டுவந்தார்.

Hero Image

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான IPL 2026 போட்டியில் சஞ்சு சாம்சன் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் போட்டி முடிந்த சில மணி நேரங்களிலேயே இருவரும் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் மரியாதை தெரிவித்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

இந்த போட்டியில் ஹெய்ன்ரிச் கிளாசன் அதிரடியாக விளையாடி ஹைதராபாத் அணியை வெற்றிக்குத் தள்ளிக் கொண்டிருந்தார். அப்போது சஞ்சு சாம்சன் ஸ்டம்பிங் மூலம் கிளாசனை அவுட் செய்தார். அந்த அவுட்டுக்கு பிறகு இருவருக்கும் இடையே மைதானத்திலேயே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

கிளாசன் அவுட்டாகி வெளியேறும்போது, சஞ்சு சாம்சன் தொடர்ந்து அவரை பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அதற்கு கிளாசனும் கோபமாக பதிலளித்ததாகவும் தொலைக்காட்சி காட்சிகளில் தெரிந்தது. பின்னர் கிளாசன் நேராக dressing room-க்கு சென்று விட்டார். இதனால் இருவருக்கும் இடையே பெரிய பிரச்சனை ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பேச தொடங்கினர்.

ஆனால் இந்த விவகாரத்திற்கு சஞ்சு சாம்சன் தான் முதலில் முற்றுப்புள்ளி வைத்தார். தனது Instagram Story-யில் ஹெய்ன்ரிச் கிளாசனுடன் சிரித்தபடி இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த சாம்சன், “மைதானத்தில் சில விஷயங்கள் நடக்கும். ஆனால் மைதானத்திற்கு வெளியே இந்த அற்புதமான மனிதருக்கு எனக்கு எப்போதும் அன்பும் மரியாதையும் இருக்கிறது” என்று பதிவிட்டார்.

இதற்கு உடனடியாக பதிலளித்த ஹெய்ன்ரிச் கிளாசனும், “உங்கள்மீது எனக்கும் நிறைய அன்பும் மரியாதையும் இருக்கிறது நண்பா. நீங்கள் விளையாடுவதைக் காண எப்போதும் பிடிக்கும். எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. அடுத்த மோதலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று Instagram-ல் பதிவிட்டார்.

இருவரின் இந்த பதிவுகளும் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. “மைதானத்தில் போட்டி, வெளியே நட்பு” என்று ரசிகர்கள் இந்த சம்பவத்தை பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, சஞ்சு சாம்சன் மற்றும் ஹெய்ன்ரிச் கிளாசன் இருவரும் 2018ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இருவருக்கும் இடையே நல்ல நட்பு இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

போட்டிக்கு நடுவே மோதல்...சமாதானம் ஆன சஞ்சு - கிளாசன்!