சூழ்நிலை புரியாதா? விராட் கோலி, படிதாரை சீண்டிய வீரேந்தர் சேவாக்!
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் தோல்வி அடைந்த காரணங்களை சுட்டிக்காட்டி வீரேந்தர் சேவாக் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.

பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதியது. போட்டியின் நடுவே மழை குறுக்கே வந்த காரணத்தால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது.டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், முதலில் பவுலிங் செய்ய முடிவு செய்தார். முதலில் விளையாடிய பெங்களூரு அணி 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் அணி 12.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து RCB அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் மழை காரணமாக 14 ஓவர்கள் போட்டி எனநிர்ணயிக்கப்பட்ட போதிலும் பெங்களூர் வீரர்கள் நிதானமாக விளையாடி ரன்கள் குவிப்பார்கள் என்று பார்த்தால் தொடர்ச்சியாக பெரிய ஷார்ட்டுகள் ஆட நினைத்து ஆட்டமிழந்தனர். எனவே, பெங்களூர் தோல்விக்கு இதுவும் காரணம் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளது. அந்த வகையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பெங்களூர் அணியை விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.
இது குறித்து பேசிய சேவாக் ” என்னை பொறுத்தவரை பெங்களூர் அணி பஞ்சாப் அணிக்கு எதிரான இந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தது என்றால் நிச்சயமாக வெற்றிபெற்றிருக்கும். ஆனால், அவர்கள் அறிவை சரியாக பயன்படுத்தாமல் விளையாடிவிட்டதாக நான் நினைக்கிறேன். உதாரணமாக, கோலி, படிதார் போன்ற வீரர்கள் அணியின் சூழ்நிலை என்னவென்று புரிந்துகொண்ட விளையாடியிருக்கலாம். ஆனால், அவர்கள் அப்படி விளையாடவில்லை.
கோலி சூழ்நிலைக்கு ஏற்ப ஆட்டத்தை மாற்றாமல் மெதுவாக ரன் குவித்து ஸ்கோரை பாதிக்கிறார். பட்டிதார் உள்ளிட்ட இளம் வீரர்களின் ஷாட் தேர்வும் முடிவெடுக்கும் திறனும் மோசமாக உள்ளன. தேவையான நேரத்தில் தான் அதிரடியான ஷார்ட்கள் ஆட முயற்சி செய்யவேண்டும். ஆனால், எல்லா நேரங்களிலும் அப்படி ஆடவேண்டும் என நினைக்க கூடாது. உணர்ச்சிவசப்பட்டு விளையாடுவது அணிக்கு கடைசி நேரத்தில் பின்னடைவாக தான் அமையும். அதற்கு எடுத்துக்காட்டு என்னவென்றால், நேற்று பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டி தான்.
பேட்டிங் வரிசையில் ஒருங்கிணைப்பு இல்லை. முக்கிய தருணங்களில் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணரவில்லை, இதுவே தோல்விக்கு காரணம். இதைப்போன்ற விஷயங்களை பெங்களூர் அணி தொடர்ச்சியாக செய்துகொண்டிருந்தது என்றால் அடுத்த போட்டிகளிலும் அணி நிச்சயமாக தோல்வியை தான் சந்திக்கும். எனவே, தவறுகளை திருத்திக்கொண்டு அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாட முயற்சி செய்யவேண்டும்” எனவும் சேவாக் விமர்சனம் செய்து அறிவுரையை வழங்கினார்.