உடல் தகுதி இல்லை என்றால் விளையாடவே வேண்டாம்..பும்ரா குறித்து கடுப்பான திலீப் வெங்சர்க்கர்!
இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள போட்டியில் பும்ரா விளையாடுவாரா இல்லயா என்கிற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கர் விமர்சித்து பேசியுள்ளார்.

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 22ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, இந்தியா தொடரை வெல்ல வேண்டுமானால், மீதமுள்ள மான்செஸ்டர் மற்றும் ஓவல் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் பங்கேற்பு உறுதியாக இல்லாதது அணிக்கு பெரும் சவாலாக உள்ளது.
பும்ரா, முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், பணிச்சுமை மேலாண்மை (workload management) காரணமாக இரண்டாவது போட்டியில் ஓய்வு எடுத்தார். இந்தத் தொடருக்கு முன்பே, இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், பும்ரா ஐந்து போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த தொடரை இந்தியா வெல்லவேண்டும் என்றால் கண்டிப்பாக பும்ரா மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் விளையாடவேண்டும் என தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், இந்திய வீரர் திலீப் வெங்சர்க்கர், பும்ராவின் இந்த “தேர்ந்தெடுத்து விளையாடும்” முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார். RevSportz இணையதளத்திற்கு அளித்த பேட்டியில், “வீரர்கள் ஒரு தொடரில் எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும். உடல் தகுதியுடன் இருக்கும் வீரர்கள், தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் போட்டிகளைத் தேர்ந்தெடுக்கக் கூடாது.
பும்ரா உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர், இந்தியாவுக்கு வெற்றியைத் தேடித்தரக்கூடியவர். ஆனால், ஒரு தொடரில் இருக்கும்போது, எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும்,” என்று வெங்சர்க்கர் கூறினார். அவர் மேலும், “உடல் தகுதியில்லை என்றால், முற்றிலுமாக விளையாடாமல் இருக்க வேண்டும். முதல் டெஸ்டுக்கு பிறகு 7-8 நாட்கள் இடைவெளி இருந்தும், பும்ரா இரண்டாவது டெஸ்டில் விளையாடாமல் இருந்தது ஏற்க முடியாது. இது அகார்கருக்கும், கம்பீருக்கும் (பயிற்சியாளர்) ஏற்புடையதாக இருக்கலாம், ஆனால் எனக்கு இல்லை,” என்று விமர்சித்தார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் “நாட்டுக்காக விளையாடுவது முக்கியம். உடல் தகுதியில்லை என்றால், விளையாடாமல் இருக்கலாம். ஆனால், உடல் தகுதியுடன் இருக்கும்போது, தொடரில் எல்லாப் போட்டிகளிலும் விளையாட வேண்டும்,” என்று அவர் தனது கருத்தை வலியுறுத்தினார். இந்த டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை, இந்தியா முதல் போட்டியில் (லீட்ஸ்) 5 விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் (பர்மிங்ஹாம்) 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மூன்றாவது டெஸ்ட் (லார்ட்ஸ்) மிகவும் பரபரப்பாக அமைந்து, 22 ரன்கல் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது, இதனால் இங்கிலாந்து 2-1 என முன்னிலை பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.