டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்படும் 15 வயது வைபவ் சூர்யவன்ஷி (Vaibhav Sooryavanshi), மிக இளம் வயதிலேயே உலகத்தரம் வாய்ந்த சாதனைகளைப் படைத்து வருகிறார். பீகாரின் தாஜ்பூர் கிராமத்திலிருந்து உருவான இந்த சிறுவன், ரஞ்சி டிராபி அறிமுகம், ஐபிஎல்லில் அதிவேக சதம் என கிரிக்கெட் உலகையே வியக்க வைத்துள்ளார்.
இருப்பினும், இவ்வளவு இளம் வயதிலேயே அவர் மீது சுமத்தப்பட்டுள்ள பிரம்மாண்டமான எதிர்பார்ப்புகள், அவரது எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் நட்சத்திர வீரர் டேரில் கல்லினன் (Daryl Cullinan) எச்சரித்துள்ளார்.
வைபவ் மீது வைக்கப்பட்டுள்ள எதிர்பார்ப்பு என்பது, இதற்கு முன் எந்த ஒரு விளையாட்டு வீரரும் சந்திக்காத அளவுக்கு விசித்திரமானது என்கிறார் கல்லினன். "அனைவரும் வைபவ் மீது அக்கறை இருப்பதாகச் சொல்வார்கள். குடும்பத்தினர் நேசிப்பார்கள், பயிற்சியாளர்கள் கவனிப்பார்கள், பிசிசிஐ (BCCI) திட்டம் வைத்திருக்கும். ஆனால், இவை அனைத்தையும் விட வைபவுக்குத் தேவை 'பாதுகாப்பு'. அவர் தனது குழந்தைப்பருவத்தை இழந்துவிடக் கூடாது" என்று அவர் கூறியுள்ளார். ஒரு இளம் வீரராக, அவர் தனது இயல்பான வாழ்க்கையை வாழ அனுமதிக்கப்பட வேண்டும் என்பது கல்லினனின் வாதம்.
வைபவ் தனது திறமையை வளர்த்துக்கொள்வதை எதிர்க்கவில்லை, ஆனால் அதே சமயம் அவர் ஒரு 'சிறுவனாக' வளரவும் வேண்டும் என்கிறார் கல்லினன். இதுகுறித்து அவர் பேசுகையில், "என் பார்வையில், அவர் இப்போதைய சூழலில் வீட்டில் அமர்ந்து தேர்வுக்காகப் படிக்க வேண்டும், நண்பர்களுடன் தெருவோர கிரிக்கெட் விளையாட வேண்டும்."
"அவருக்குத் தேவை கேமராக்கள் இல்லாத, யாரும் கவனிக்காத சாதாரண வாழ்க்கை. அங்கேதான் அவர் அமைதியாகத் தனது தோல்விகளைத் தாங்கிக்கொள்ளவும், வாழ்க்கையை ரசிக்கவும் முடியும்.வைபவ் 25 வயதிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிடக் கூடாது; மாறாக 40 வயது வரை நீடிக்க வேண்டும். அதற்கு அடுத்த 3 ஆண்டுகள் அவர் மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.
இறுதியாக, வைபவ் சூர்யவன்ஷிக்கு வழிகாட்டியாகச் சச்சின் டெண்டுல்கரை அணுக வேண்டும் என கல்லினன் பரிந்துரைத்துள்ளார். "சச்சினை விட ஒரு சிறந்த வழிகாட்டி அவருக்கு கிடைக்க முடியாது. அந்த இளம் வயதில் இவ்வளவு பெரிய புகழைச் சச்சின் எப்படிச் சமாளித்தார் என்பதையும், அதன் பின்னணியில் உள்ள அழுத்தத்தையும் அவரே வைபவுக்குச் சிறந்த முறையில் எடுத்துரைக்க முடியும்" என்று தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
