மிரட்டல் ஆட்டம்..பாபா இந்திரஜித், விமல் அதிரடி…! திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய DGD vs SLST போட்டியில், திண்டுக்கல் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7-வது சீசன் டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெறும் 26வது போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணிகள் திருநெல்வேலியில் உள்ள இந்தியன் சிமெண்ட் கம்பெனி கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற திண்டுக்கல் டிராகன்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய சேலம் அணி, சன்னி சந்து அதிரடியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 160 ரன்கள் எடுத்தது. இதில் சன்னி சந்து அரைசதம் கடந்து அசத்தினார். இதையடுத்து, 161 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் திண்டுக்கல் அணியில் முதலில் விமல் குமார், சிவம் சிங் ஜோடி களமிறங்கியது.
இதில் சிவம் சிங் 8 ரன்களில் ஆட்டமிழக்க, விமல் பொறுப்பாக விளையாடி அணிக்கு நல்லத் தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தார். அதன்பின் பாபா இந்திரஜித் களமிறங்கி விமலுடன் இணைந்து அணியின் ஸ்கோரை வலுப்படுத்தினார். பொறுப்பாக விளையாடிக்கொண்டிருந்த விமல் அரைசதத்தை தவறவிட்டு 42 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.
ஆனால், பாபா இந்திரஜித் தனது அதிரடியான ஆட்டத்தால் அரைசதம் அடித்து விளாசினார். அதன்பின் களமிறங்கிய ஆதித்யா கணேஷ் (19) ஓரளவு ரன்கள் எடுத்து வெளியேற, பூபதி குமார் மற்றும் பாபா இந்திரஜித் இணைந்து அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்தனர்.
முடிவில், திண்டுக்கல் அணி 18.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்கள் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் சேலம் அணியை வென்றது. இதில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 83* ரன்களும், விமல் குமார் 42 ரன்களும் குவித்தனர். சேலம் அணியில் சன்னி சந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஏற்கனவே, திண்டுக்கல் அணி பிலேஆப் சுற்றிற்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில், இந்த போட்டியில் வென்றதன் மூலம் 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், சேலம் அணி 4 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.