சரசரவென சரிந்து தத்தளித்த ராஜஸ்தான்…! 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி!
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளி விவரப்பட்டியலில் மும்பை அணி முதலிடத்தை பிடித்துள்ளது.

ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் மோதியது. போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்தது.
ஆரம்பமே விக்கெட் விடாமல் அதிரடியாக விளையாடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது. மும்பை அணி 217 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்ததாக 218 எடுத்தால் வெற்றி என்ற பிரமாண்ட இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது.
கடைசியாக குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி இந்த போட்டியில் என்ன செய்ய போகிறார் என ரசிகர்கள் மற்றும் மும்பை பந்துவீச்சாளர்கள் காத்துகொண்டு இருந்த நிலையில் சிக்ஸர் அடிக்க முயன்று வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆகி வருத்தத்துடன் பெவிலியன் திரும்பினார். அவர் பெவிலியன் திரும்பியவுடன் இதோ நானும் வந்துட்டேன் என்பது போல யஷஸ்வி ஜெய்ஸ்வால் 2 சிக்ஸர்கள் விளாசி 13 ரன்களுக்கு ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
இதன் காரணமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தடுமாறியது என்றே கூறலாம். மீண்டும் மிரட்டலை கொடுக்கும் வகையில் மும்பை பந்துவீச்சாளர்கள் தொடர்ச்சியாக விக்கெட்களை விடாமல் வீழ்த்தி கொண்டு இருந்தார்கள். நிதிஷ் ராணா 9, ரியான் பராக் 16 என முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் போட்டியில் ராஜஸ்தான் வெற்றி என்பது கனவாக போனது தெரிந்தது. அவர்களுக்கு அடுத்ததாக வந்த துருவ் ஜூரல் 11, ஷிம்ரோன் ஹெட்மியர் 0 என மழை சாரல் போல சடசடவென தங்களுடைய விக்கெட்களை இழந்தனர்.
கடைசியாக ஆர்ச்சர் மட்டும் களத்தில் நின்று விளையாடி கொண்டிருந்த நிலையில் அவரும் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இறுதியாக மும்பை அணியின் மிரட்டலான பந்துவீச்சின் காரணமாக 16.1 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணைத்து விக்கெட்களையும் இழந்து 117 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதன் காரணமாக, மும்பை அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளி விவரப்பட்டியலில் முதல் இடத்திற்கும் சென்றது. மும்பை அணியின் பந்துவீச்சை பொறுத்தவரையில் அதிகபட்சமாக கரண் சர்மா3, டிரென்ட் போல்ட் 2, ஜஸ்பிரித் பும்ரா 2, ஆகியோர் விக்கெட்களை வீழ்த்தினார்கள்.