சாம்பியன்ஸ் டிராபி : முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியது பாகிஸ்தான்! இந்தியா அபார வெற்றி…
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

துபாய்: துபாயில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்றைய நாள் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா அணியும், முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதின. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துபாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, இந்திய அணிக்கு 242 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. பாகிஸ்தான் அணி ஆரம்பத்தில் திணறினாலும், பின்னர் நிலைத்து நின்று விளையாடியது. இறுதியில் மளமளவென விக்கெட்டுகள் சரிய தொடங்கின. முடிவில் 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்களில் சுருண்டது.
பாகிஸ்தான் அணி சார்பாக சவுத் ஷகீல் அதிகபட்சமாக 62 ரன்கள் எடுத்தார். இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். பின்னர், 242 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 42.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 244 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இதன் மூலம், இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. விராட் கோலி போட்டியை வென்ற சதம் அடித்தார். இந்த வெற்றியின் மூலம், இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
இந்திய அணி சார்பாக, விராட் கோலி 111 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் எடுத்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 56 ரன்களும், ஷுப்மான் கில் 46 ரன்களும் எடுத்தனர். ரோஹித் சர்மா 20 ரன்கள் எடுத்தும், ஹர்திக் பாண்டியா 8 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழந்தனர்.
வெளியேறியது பாகிஸ்தான்
இந்தியாவுடன் நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற நியூசி.க்கு எதிரான போட்டியிலும் 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. 27ஆம் தேதி வங்கதேசத்துக்கு எதிரான போட்டி மட்டுமே மீதியுள்ளது. அதில் வெற்றி பெற்றாலும் அடுத்த சுற்றுக்கு வர முடியாது. இதனால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து முதல் அணியாக பாகிஸ்தான் வெளியேறியது, அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சதம் விளாசினார் விராட் கோலி
இதில் 3ஆவது விக்கெட்டுக்கு கோலி களமிறங்கினார். முதலில் சுப்மன் கில்லுடன் ஜோடி சேர்ந்து அபாரமாக விளையாடினார். பின்னர் கில் அவுட்டாகி வெளியேறவே, ஸ்ரேயஸ் அய்யருடன் ஜோடி சேர்ந்தார். கடைசிவரை களத்தில் நின்ற கோலி, 111 பந்துகளில் 100 ரன்கள் விளாசினார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இது ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலியின் 51ஆவது சதம் ஆகும்.