ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!
இந்திய அணியின் வழக்கமான கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே, டி 20-யில் இருந்து விலகிய நிலையில், தற்போது டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.
இதுகுறித்து அவர், இந்திய அணிக்காக இதுவரை விளையாடியது மிகவும் மகிழ்ச்சி. இத்தனை ஆண்டுகளாக எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி என உருக்கமாக தெரிவித்துள்ளார். முன்னதாக, பிசிசிஐ தேர்வுக்குழுவும் பயிற்சியாளர் கவுதம் கம்பீரும் அடுத்த கேப்டன் யார் என்பதை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.
இங்கிலாந்தில் நடைபெறும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் ஜூன் மாதம் தொடங்கும். இந்த நிலையில், ரோஹித் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, வரவிருக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் புதிய கேப்டன் இந்திய அணியை வழிநடத்துவார் என தெரிகிறது.
அதன்படி, புதிய கேப்டன் பும்ராவாக இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா, கே.எல். ராகுல், சுப்மான் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். டெஸ்ட் போட்டிகளில் இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பேட்ஸ்மேன் ரோஹித் ஆவார். இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 40.57 சராசரியாக 4301 ரன்கள் எடுத்துள்ளார், இதில் 12 சதங்கள் மற்றும் 18 அரைசதங்கள் அடங்கும்.