இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்வதில், ஷமியின் பங்கு மிகமுக்கியம்… பாண்டிங்.!

இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெல்லவேண்டுமானால் ஷமி முன்பை விட சிறப்பாக பந்துவீச வேண்டும் என பாண்டிங் கருத்து.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 7 ஆம் தேதி, லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன. இரு அணிகளும் இதற்காக தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் இந்த இறுதிப்போட்டி குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய அணிக்கு கோப்பை வெல்வதில் முகமது ஷமி முக்கிய பங்காற்ற வேண்டும் என கூறியுள்ளார்.
வேகப்பந்துவீச்சாளர் பும்ரா இல்லாத நிலையில் இந்திய அணிக்கு ஷமி, கூடுதல் பொறுப்பேற்று முன்பு இருந்ததை விட சிறப்பாக பந்துவீச வேண்டும். ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஷமி எப்படிப்பட்ட வீரர் என்பது தெரியும், டெஸ்ட் போட்டிகளில் புதிய மற்றும் பழைய பந்துகளிலும் ஷமி சிறப்பாக பந்துவீசக் கூடியவர்.
இந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியை இந்தியா வெல்ல வேண்டும் என்றால், ஷமி தனது விளையாட்டை அடுத்த லெவலுக்கு முன்னேற்ற வேண்டும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சென் ஆகியோர் மிடில் ஆர்டரில் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக இருப்பவர்கள், இதனால் ஷமியின் பங்கு இந்தியாவிற்கு மிகமுக்கியம் என்று பாண்டிங் தெரிவித்துள்ளார்.