பாகிஸ்தான் அத்துமீறினால் இந்தியா தக்க பதிலடி கொடுக்கும்…விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கை!
பாகிஸ்தான் மேற்கொள்ளும் எந்தவொரு அத்துமீறலுக்கும் இந்தியா தகுந்த பதிலடி கொடுக்கும் என வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஏற்று, துப்பாக்கிச் சண்டையும், ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டிருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி நேற்று அறிவித்தும் இருந்தார்.
பாகிஸ்தானின் ராணுவ தலைமை இயக்குநர் நேற்று பிற்பகல் 3:35 மணிக்கு இந்திய ராணுவ தலைமை இயக்குநரை தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரு தரப்பினரும் தரை, வான் மற்றும் கடல் வழியாக தாக்குதல் நடத்துவதை இந்திய நேரப்படி, 5 மணி முதல் போர் நிறுத்தம் செய்யப்பட்டது.
அன்று இரவு செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசினார். இது குறித்து பேசிய அவர் ” பரஸ்பர புரிதலுடன் அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின் கீழ் இந்தியாவும் பாகிஸ்தானும் எல்லையில் பதற்றத்தைக் குறைக்கவும், தாக்குதல்களை நிறுத்தவும் ஒப்புக்கொண்டன. ஆனால், இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்த மூன்று மணி நேரத்திற்குள், பாகிஸ்தான் தனது உறுதிமொழியை மீறி, இந்தியாவின் பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளில் திட்டமிட்ட ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
என்னை பொறுத்தவரை இது ஒரு மன்னிக்க முடியாத அத்துமீறல் மற்றும் சர்வதேச ஒப்பந்தங்களுக்கு எதிரான துரோகச் செயல் ஆகும். இந்தியா, பாகிஸ்தானின் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களை ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. இந்த அத்துமீறலுக்கு பதிலடி கொடுக்க இந்திய ஆயுதப் படைகளுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. எங்கள் தேசிய பாதுகாப்பையும் இறையாண்மையையும் பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும்.
பாகிஸ்தானுக்கு நாங்கள் தெளிவான எச்சரிக்கையை விடுக்கிறோம் இந்தியாவின் பொறுமையை சோதிக்க வேண்டாம். எந்தவொரு மேலதிக ஆக்கிரமிப்பு அல்லது பயங்கரவாத ஆதரவு நடவடிக்கைகளுக்கும் இந்தியாவிடமிருந்து உறுதியான மற்றும் தகுந்த பதிலடி இருக்கும். சர்வதேச சமூகத்தையும் நாங்கள் வலியுறுத்துகிறோம் எனவும் மிகவும் காட்டத்துடன் கண்டனத்தை தெரிவித்தார்.
இந்த சம்பவத்திற்கு G7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் சவுதி அரேபியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் இந்த தாக்குதல்களை மறுத்து, இந்தியாவே தனது பிரதேசத்தில் தாக்குதல்களை நடத்தி பாகிஸ்தான் மீது பழி சுமத்துவதாக குற்றம்சாட்டியுள்ளது.