முதன்முறையாக ஐசிசி விருது வென்றுள்ள விராட் கோலி.!

அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் விராட் கோலி முதன்முறையாக வென்றுள்ளார்.

அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை இந்தியாவின் விராட் கோலி முதன்முறையாக வென்றுள்ளார்.

ஐசிசி சார்பில் ஒவ்வொரு மாதத்திலும் சிறந்து விளையாடும் வீரர்களுக்கு அந்த மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதே போன்று அக்டோபர் மாதத்திற்கான ஐசிசியின் விருதுக்கு விராட் கோலி, தென் ஆப்பிரிக்காவின் டேவிட் மில்லர், ஜிம்பாப்வேயின் சிக்கந்தர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டதாக சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது விராட் கோலி அக்டோபர் மாதத்திற்கான ஐசிசி விருதை முதன்முறையாக வென்றுள்ளார். விராட், அக்டோபர் மாதத்தில் மட்டும் டி-20 போட்டிகளில் 205 ரன்கள் (சராசரி-205, ஸ்ட்ரைக் ரேட்-150.73) குவித்திருக்கிறார். இந்த டி-20 உலகக்கோப்பை தொடரிலும் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். குறிப்பாக பாகிஸ்தானுக்கு எதிரான அவரது ஆட்டத்தை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள், தோற்கும் நிலையில் இருந்த இந்திய அணியை கோலியும், ஹர்டிக் பாண்டியாவும் மீண்டு எழச்செய்தார்கள்.

ஃபார்ம் அவுட் விமரிசிக்கப்பட்டு வந்த விராட் கோலி, ஆசியக்கோப்பையில் சதமடித்து அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் திரும்பியுள்ளார். ஆசியக்கோப்பை தொடரிலிருந்து தற்போது உலகக்கோப்பை தொடர் வரை ஒவ்வொரு போட்டியிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி, நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிங்சில் 246 ரன்கள் குவித்து முதலிடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.