என்னது டெஸ்ட் போட்டியில் கில் கேப்டனா? டென்ஷனாகி கடுமையாக விமர்சித்த கிரிஸ் ஸ்ரீகாந்த்!
கில்லின் டெஸ்ட் அனுபவம் கேப்டன்சிக்கு சரியாக இருக்காது என கிரிஸ் ஸ்ரீகாந்த் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது ரசிகர்களுக்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியதோடு இந்திய அணிக்கு பின்னடைவாகவும் அமைந்தது. அதிலும் குறிப்பாக கேப்டனாக இருந்த ரோஹித் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற காரணத்தால் இனிமேல் எந்த வீரர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவார் என்கிற கேள்விகளும் எழுந்தது.
ரோஹித் ஷர்மா மே 7, 2025 அன்று டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, கில் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று பிசிசிஐ முடிவு செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இது குறித்து வெளியாகவில்லை. அப்படி இருந்தாலும் இந்த தகவலே விமர்சனங்கள் எழுவதற்கு காரணமாகவும் அமைந்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கில் கேப்டனாக இருக்க வேண்டாம் பண்ட், பும்ரா போன்ற வீரர்கள் இருக்கலாம் என தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் தேர்வுக்குழுத் தலைவருமான கிரிஸ் ஸ்ரீகாந்த் சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசும்போது “சுப்மன் கில் இந்திய டெஸ்ட் கேப்டனாக அறிவிக்கப்படுவது எனக்கு விருப்பம் இல்லை” என தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் ” என்னை பொறுத்தவரை சுப்மன் கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் நிச்சயமான இடம் பெறவில்லை. அப்படி இருக்கையில் நீங்கள் எப்படி அவரை கேப்டனாக எப்படி தேர்வு செய்யலாம்?
அவரை கேப்டனாக தேர்வு செய்ய அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு தேர்வு செய்யலாம். ஆனால் அது கூட இல்லை. எனவே, ஜஸ்பிரித் பும்ரா அல்லது கே.எல்.ராகுல் அல்லது ரிஷப் பந்த்-ஐ கேப்டனாக்க வேண்டும். இவர்களுக்கு அனுபவம் நிச்சயமாக நிறையவே இருக்கிறது. கில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற SENA நாடுகளில் (தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) பலவீனமாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
2024-25 பார்டர்-கவாஸ்கர் தொடரில் கில் 5 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். ஒன்பது முறை தோல்வியடைந்து, பத்தாவது முறை ரன்கள் எடுப்பதால் மட்டுமே அவருக்கு பெரிய பெரிய வாய்ப்புகள் வருவதாக நான் நினைக்கிறேன். இந்திய ஆடுகளங்களில் யார் வேண்டுமானாலும் ரன்கள் குவிக்கலாம், ஆனால் SENA நாடுகளில் சாதிக்க வேண்டும். அப்படியெல்லாம் சாதித்தால் மட்டும் தான் கேப்டனாக வாய்ப்பு கொடுக்கலாம்.
அதைப்போல பேட்டிங்கில் கூட கில்லுக்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும், கே.எல்.ராகுலை நம்பர் 4 இடத்திற்கு முக்கிய வீரராக பயன்படுத்த வேண்டும்” எனவும் சற்று காட்டத்துடன் கிரிஸ் ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.