நியூ ஜெர்சி : FIFA உலகக் கோப்பை தொடரில் எர்லிங் ஹாலண்டின் அபார ஆட்டத்தின் உதவியுடன் செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நார்வே அணி, ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே நாக்அவுட் சுற்றுக்கான இடத்தை உறுதி செய்துள்ளது.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் நடைபெற்ற குரூப்-I ஆட்டத்தில் தொடக்கம் முதலே நார்வே ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதியின் இறுதியில் மாற்று வீரராக களமிறங்கிய மார்கஸ் ஹோல்ம்கிரென் பெடர்சன் கோல் அடித்து நார்வேக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தனது முதல் கோலை பதிவு செய்து அணியின் முன்னிலையை 2-0 ஆக உயர்த்தினார். பின்னர் செனகல் அணிக்காக இஸ்மைலா சார் ஒரு கோல் அடித்து வித்தியாசத்தை குறைத்தார்.
ஆனால் செனகல் பாதுகாப்பு வீரர்களின் தவறை மீண்டும் பயன்படுத்திக் கொண்ட ஹாலண்ட், போட்டியின் தனது இரண்டாவது கோலையும் அடித்து நார்வேயை 3-1 என்ற வலுவான நிலைக்கு கொண்டு சென்றார். இறுதிநேரத்தில் இஸ்மைலா சார் மேலும் ஒரு கோல் அடித்தாலும், செனகலால் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.
இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த ஹாலண்ட், உலகக் கோப்பையில் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் இரட்டை கோல் சாதனை படைத்தார். இதன்மூலம் சர்வதேச கால்பந்தில் 52 போட்டிகளில் 59 கோல்கள் என்ற மிரட்டலான சாதனையை எட்டியுள்ளார்.
முன்னதாக ஈராக்குக்கு எதிரான முதல் போட்டியிலும் இரண்டு கோல்கள் அடித்திருந்த ஹாலண்ட், தற்போது இரண்டு போட்டிகளில் நான்கு கோல்கள் அடித்து கோல்டன் பூட் போட்டியிலும் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நார்வே, நம்பிக்கையுடன் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. கடந்த 18 போட்டிகளில் ஒரே ஒரு தோல்வியை மட்டுமே சந்தித்துள்ள நார்வே, தற்போது தொடரின் ஆபத்தான அணிகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது.
மறுபுறம், இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ள செனகல் அணியின் நாக்அவுட் சுற்று வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அடுத்த போட்டியில் ஈராக் அணியை கட்டாயம் வெல்ல வேண்டிய நிலையில் செனகல் உள்ளது.
குரூப்பின் முதலிடத்தை தீர்மானிக்கும் முக்கிய ஆட்டத்தில் அடுத்ததாக நார்வே அணி பிரான்ஸை எதிர்கொள்ள உள்ளது. ஹாலண்ட் தலைமையிலான நார்வே மற்றும் எம்பாப்பே தலைமையிலான பிரான்ஸ் மோதல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
