பிச்சைக்காரர்கள் தங்கும் விடுதியாக மாறிய பள்ளிக்கூடம்! மீட்டு தாருங்கள்! 6 வயது சிறுமி நீதிமன்றத்தில் வழக்கு!

திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மீஞ்சூர் ஊராட்சியில் வசித்து வருபவர் பாஸ்கரன் அவரது மகள் 6 வயதே ஆன அதிகை முத்தரசி. இந்த முத்தரசி மீஞ்சூர் ஒன்றிய ஊராட்சி தொடக்கப் பள்ளியில் கல்வி கற்க ஏற்ற சூழ்நிலை உருவாக்கி தர வேண்டும். அந்த பள்ளியை மேம்படுத்த வேண்டும் எனக் கோரி சென்னை நீதிமன்றத்தை நாடியுள்ளார். அதற்காக அவளின் தந்தையுடன் சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தாலுகாவில் மீஞ்சூர் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் அருகில் கோயில் உள்ளதால் அங்குள்ள பிச்சைக்காரர்கள் அருகில் இருக்கும் இந்த பள்ளிக்கூடத்தை தங்கும் இடமாக மாற்றி விட்டதாகவும், மேலும் அங்கு சட்ட விரோதமான பல சம்பவங்கள் நடைபெறுவதாகவும், அதனால் அங்குலல்ல ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றி விட்டு ஊராட்சி ஒன்றிய பள்ளியை மேம்படுத்த கோரியும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. மேலும் இந்த புகார் குறித்து ஏற்கனவே பிப்ரவரி மார்ச் மாதங்களில் அரசு அலுவலங்களில் புகார் கொடுத்தும் எந்த பலனும் இல்லை எனவும் கூறப்படுகின்றது.
இதுகுறித்து விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதி, இந்த வழக்கை அக்டோபர் 16ம் தேதிக்கு ஒத்தி வைப்பதாகவும், இந்த வழக்கு குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பதிலளிக்க வேண்டும் எனவும், அக்டோபர் 16ம் தேதி திருவள்ளூர் மாவட்ட கல்வி அதிகாரி, பொன்னேரி தாலுக்கா கல்வி அதிகாரி, மீஞ்சூர் கல்வி அதிகாரி என அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.