Asia Cup 2023 : ஆசிய கோப்பை தொடரில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.! வங்கதேசம் ‘த்ரில்’ வெற்றி.!

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நாளை (செப்டம்பர் 17) இந்தியா மற்றும் இலங்கை அணிகள் கொழும்புவில் இறுதிப்போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில் நேற்று சூப்பர் 4 சுற்றின் இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதிக்கொண்டன.
இந்தியா அதற்கு முன்னதாகவே இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதி போட்டிக்குள் சென்றது. அதனால் நேற்றைய போட்டி எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாதது என்பதால், இந்திய அணியில் விராட் கோலி , பும்ரா, ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருந்தது. இதில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய வங்கதேச அணி குறைந்த ரன்களில் தொடக்க ஆட்டக்காரர்களை இழந்தாலும், அடுத்து களம் இறங்கிய வீரர்கள் நல்ல ரன்களை எடுத்து 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்திருந்தது.
இதில், அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல் ஹசன் 80 ரன்கள் எடுத்து இருந்தார். தவ்ஹித் ஹிரிடோய் 54 ரன்கள், நசும் அகமது 44 ரன்கள், மஹேதி ஹசன் 29 ரன்கள், மெஹிதி ஹசன் மிராஸ் 13 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்தன. இந்திய அணி சார்பில் ஷரதுல் தாக்கூர் 3 விக்கெட்களையும், முகமது ஷமி 2 விக்கெட்களையும், பிரசித், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.
இதனை தொடர்ந்து 50 ஓவர்களில் 266 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோகித் ஷர்மா ரன் எதுவும் அடிக்காமல் அவுட் ஆனார். உடன் களமிறங்கிய சுப்மன் கில் 121 ரன்கள் விளாசினார். சூர்யகுமார் யாதவ் 26 ரன்களும், திலக் வர்மா 5 ரன்களும், கேஎல் ராகுல் 19 ரன்களும், இஷான் கிஷன் 5 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 7 ரன்களும், அக்சர் படேல் 42 ரன்களும், ஷர்துல் தாக்கூர் 11 ரன்களும் எடுத்து அவுட் ஆகினார்.
இறுதியில் ஒரு ஓவருக்கு 12 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கில் இருக்கும் போது முகமது ஷமி மற்றும் பிரசித் கிருஷ்ணா மட்டுமே களத்தில் இருந்தனர். இறுதி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து 50 ஓவர் முடிவில் 259 ரன்கள் மட்டுமே எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வங்கதேசத்திடம் தோல்வி கண்டது. இதன் மூலம் இந்திய அணி நடப்பு ஆசிய கோப்பை தொடரில் முதல் தோல்வியை பதிவு செய்தது. வங்கதேச அணி ஆறுதல் வெற்றியுடன் ஆசிய கோப்பையை விட்டு வெளியேறியது.
வங்கதேச அணி சார்பாக முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்களையும், மஹேதி ஹசன், தன்சிம் ஹசன் சாகிப் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும், மெஹிதி ஹசன் மிராஸ், ஷகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.