பாகிஸ்தான் குண்டு வெடிப்பு : ஒப்புக்கொண்ட பயங்கர அமைப்பு! உயரும் பலி எண்ணிக்கை!
பாகிஸ்தானில் நேற்று ரயில் நிலையத்தில் நடந்த பயங்கர வெடிகுண்டு விபத்தில் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில், சம்பவ நிகழ்ந்த இடத்திலேயே 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரியவந்தது.
மேலும், காயமடைந்தோரில் சிலரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருந்ததாகவும் இதனால் பலி எண்ணிக்கை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அதன்படி, தற்போது மேலும் 5 பேர் பரிதமபாக உயிரிழந்துள்ளனர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
அதிலும், சிகிச்சை பெற்று வருபவர்களில் பலர் கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் 27 பேர் உயிரிழந்த நிலையில் அதில் 14 ராணுவ வீரர்களும் 13 பேர் பொதுமக்களும் ஆவார்கள் எனத் தெரியவந்துள்ளது. இது மேலும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தாக்குதலை, பயங்கரவாதி ஒருவர் தன் உடலில் மறைத்து வைத்திருந்த வெடி குண்டை வெடிக்கச் செய்து தற்கொலைத் தாக்குதல் நிகழ்த்தியதாகத் தெரியவந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை படை என்ற ஒரு அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
மேலும் அந்த அமைப்பு, ‘பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவ வீரர்களை மட்டுமே குறிவைத்துத் தாக்குதல் நடத்தினோம்’ எனத் தெரிவித்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து குவெட்டா நகரம் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், என முக்கிய இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலின் எதிரொலியாக பொது இடங்களில் பொதுமக்கள் ஒன்று கூட வேண்டாம் என்றும் அந்நாட்டின் அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஜூலை 19ஆம் தேதி நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம்.!
July 3, 2025