கோயில் பூசாரிகளுக்கு சம்பள உயர்வு..விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி! கர்நாடகா பட்ஜெட் 2025-யின் முக்கிய அம்சங்கள்!
கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் ரூ. 60,000 லிருந்து ரூ.72,000 ஆக உயர்த்தப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை அறிவித்தார்.

கர்நாடகா : 2025-26 ஆம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டிற்காக மொத்தம் ரூ. 4.095 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில். கர்நாடக முதல்வர் சித்தராமையா வெள்ளிக்கிழமை தனது 16வது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மேலும், கர்நாடக பட்ஜெட்டில், காங்கிரஸ் அரசு வாக்குறுதி அளித்த ஐந்து உத்தரவாதத் திட்டங்களுக்கு ரூ.51,034 கோடி ஒதுக்கப்பட்டும் இருக்கிறது.
பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் உயர்த்தப்பட்டது முதல் கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்பட்டது வரை இடம்பெற்றுள்ளது. அப்படி முக்கியமான சில அம்சங்களை மட்டும் பார்ப்போம்.
கர்நாடக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்
தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் புதிய வணிகங்களை ஊக்குவிக்க உதவும் வகையில் முதலீடுகளை ஈர்த்து, உற்பத்தியை அதிகரிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (MSME) கூடுதல் நிதி உதவிக்காக ரூ.3,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது,
கோயில் பூசாரிகளின் ஆண்டு சம்பளம் ரூ. 60,000 லிருந்து ரூ.72,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது . ஜெயின் பூசாரிகள், சீக்கியர்களின் தலைமை மானியதாரர்கள் மற்றும் மசூதிகளின் பேஷ்-இமாம்களுக்கு வழங்கப்படும் கௌரவ சம்பளம் ரூ 6,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
குழந்தைகள் மையப்படுத்தப்பட்ட திட்டங்களுக்கு ரூ. 62,033 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்படும் தேசிய வெளிநாட்டு மாணவர் உதவித்தொகை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும் .
அதே சமயம் விவசாயிகளுக்கு உதவ ரூ.20,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பேரழிவுகளின் போது விவசாயிகளை நிதி ரீதியாக பாதுகாக்க பயிர் காப்பீடு திட்டங்களுக்கு ரூ.2,000 கோடி ஒதிக்கீடு.
கர்நாடகா முழுவதும் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் அதிகபட்ச டிக்கெட் விலை ரூ. 200 ஆக இருக்கும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்தார்.
சிரமங்களை எதிர்கொள்ளும் பத்திரிகையாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியம் ரூ. 12,000- லிருந்து ரூ. 15,000- ஆகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ. 6,000- லிருந்து ரூ. 7,500- ஆகவும் உயர்த்தப்படும்.
பெங்களூருக்கு என்ன அறிவிப்பு?
பெங்களூருவை உலக சுகாதாரத் தரத்தின் நகரமாக மாற்றும் நோக்கத்துடன், அடுத்த மூன்று ஆண்டுகளில், பிராண்ட் பெங்களூரு திட்டத்தின் கீழ், ரூ. 413 கோடி செலவில் ‘விரிவான சுகாதாரத் திட்டம்’ செயல்படுத்தப்படும் .
பெங்களூரில் அடிக்கடி மழை பெய்து வரும் காரணத்தால் வானிலை தொடர்பான சவால்களை எதிர்கொள்ளவும், நகரின் வடிகால் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்தவும் ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டது.
110 கிராமங்களுக்கு குடிநீர் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட காவிரி நீர் வழங்கல் திட்டத்தின் ஐந்தாவது கட்டத்திற்கு மேலும் ரூ.555 கோடி ஒதுக்கப்பட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு இந்த முறை பெங்களூருக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 7,000 கோடியாக அதிகரித்துள்ளது . பெங்களூரு முன்முயற்சியின் கீழ் 21 திட்டங்களுக்கு மொத்தம் ரூ.1,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.