தள்ளுமுள்ளு…அலைமோதிய கூட்டம்! தவெகவின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நடந்த நிகழ்வுகள்!
ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சாலையில் காத்திருந்த மக்களுக்கு விஜய் வேனில் இருந்தபடி கை அசைத்து வீட்டிற்கு சென்றார்.

சென்னை : ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தவெக சார்பில் நேற்று இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தலைவர் விஜய் கலந்து கொண்டு சரியாக 6.24 மணிக்கு நோன்பு திறந்தார். நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் இஸ்லாமியர்களின் குல்லா, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி அணிந்து வந்திருந்தார்.
இது வெறும் நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல், உண்மையிலேயே இன்றைக்கு ஒரு விஜய் நோன்பு இருந்திருக்கிறார். காலை முதல் உணவருந்தாமல் இருந்த அவர், நோன்புக் கஞ்சி, பேரீச்சம்பழம், சமோசா சாப்பிட்டு நோன்பு திறந்தார். இந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டபோது சில முக்கிய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
தள்ளுமுள்ளு
இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொள்கிறார் என்பதால் இஸ்லாமியர்கள் பலரும் அவரை பார்க்க கலந்துகொள்ள குவிந்த காரணத்தால் ராயப்பேட்டை YMCA அரங்கிற்குள் கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. எனவே, கூட்டத்தை அப்புறப்படுத்த காவல்துறை தீவிர நடவடிக்கை எடுத்து சிறிது தடியடி நடத்தி கட்டுப்படுத்தினார்கள்.
கதவு உடைந்தது
நிகழ்ச்சியில் பங்கேற்க மக்கள் அதிகம் கூடிய நிலையில், கூட்ட நெரிசலில் அரங்கின் கதவின் கண்ணாடி உடைந்து . கதவை உடைத்துக்கொண்டு உள்ளே செல்ல பலரும் முயன்றார்கள். திடீரென கண்ணாடி உடைந்த காரணத்தால் அந்த சமயம் அங்கு பரபரப்பான சுழலும் ஏற்பட்டது.
அலைமோதிய கூட்டம்
இந்த நிகழ்ச்சி முடிந்தபிறகு வீட்டிற்கு திரும்பிய விஜயை பார்க்க சாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். ராயப்பேட்டை அரசு மருத்துவமனை சாலையில் விஜயை பார்க்கவேண்டும் என பாலம் மற்றும் கீழே இளைஞர்கள், பெண்கள் என பலரும் கூடியிருந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் விஜய் வேனில் இருந்து மேலே ஏறிக்கொண்டு கை அசைத்து சென்றார். தடுப்பை உடைத்துக்கொண்டு விஜயை பார்க்க கூட்டம் கூடியதால் அங்கு போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. பிறகு போலீசார் நடவடிக்கை எடுத்து கூட்டத்தை கட்டுப்படுத்தினார்கள்.