செந்தில் பாலாஜிக்கு எந்த பதவியும் கொடுக்க கூடாது! உச்சநீதிமன்றத்தில் அனல் பறந்த வாதம்!
செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்யக்கோரிய அமலாக்கத்துறை மனுவை உச்சநீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

டெல்லி : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் (2011) அமைச்சராக இருந்த போது பதியப்பட்ட வழக்கில், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் இருக்கிறார். அவர் ஜாமீன் மனுவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் வழக்கு பதியப்பட்டது.
ஜாமீனில் வெளியே வந்த பிறகு மீண்டும் அமைச்சர் பதவி ஏற்ற செந்தில் பாலாஜிக்கு எதிராக உச்சநீதிமன்றம் கடந்த வாரம் அதிருப்தி தெரிவித்து இருந்தது. ஜாமீன் வேண்டுமா அல்லது அமைச்சர் பதவி வேண்டுமா என்ற கேள்வி எழுப்பி இன்றைக்குள் (மார்ச் 28) முடிவு எடுக்க உத்தரவிட்டு இருந்தது. அதனை அடுத்து செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அமலாக்கத்துறை தாக்கல் செய்திருந்த செந்தில் பாலாஜி ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்ற மனு மீதான விசாரணையின் போது, அமலாக்கத்துறை தரப்பு வாதிடுகையில், வழக்கு முடியும் வரை செந்தில் பாலாஜி எந்தவித அரசு பதவிகளையும் வகிக்க கூடாது. அடுத்த தேர்தலில் வெற்றி பெற்றால் கூட அவர் அமைச்சர் பதவி வகிக்க கூடாது.
மீண்டும் அமைச்சராகி மீண்டும் அதனை ரத்து மனு அளிக்கும் வகையில் அவர் நடந்து கொள்ளக்கூடாது. டெல்லி முதலமைச்சர் (அரவிந்த் கெஜ்ரிவால்) ஜாமீனில் டெல்லி சட்டசபைக்கு செல்லக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது போல, செந்தில் பாலாஜிக்கு உத்தரவிட வேண்டும் என அமலாக்கத்துறை வாதிட்டது.
அதற்கு செந்தில் பாலாஜி வாதிடுகையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கு முடிய 15 ஆண்டுகள் கூட ஆகலாம். அதுவரையில் பதவியில் இருக்க கூடாது எப்படி கூற முடியும்? பதவியா ஜாமீனா என்ற கேள்விக்கு பதவி விலகி பதில் அளித்துவிட்டார் செந்தில் பாலாஜி. மீண்டும் தேர்தலில் ஜெயித்து அமைச்சராகக் கூடாது என உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு எந்த அதிகாரமும் இல்லை என செந்தில் பாலாஜி தரப்பு வாதிட்டது .
அதனை அடுத்து , தற்போது செந்தில் பாலாஜி அமைச்சராக இல்லை என்ற வாதத்தை ஏற்கிறோம். அதனால் அவருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்க தேவையில்லை. ஆளுநர் மாளிகை செய்தி குறிப்புகளை ஏற்று இந்த வழக்கை முடித்துவைக்கிறோம் என அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.