பாகிஸ்தானில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டு தாக்குதல்கள்! 14 வீரர்கள் பலி!
பாகிஸ்தான் பலுசிஸ்தானில் நடைபெற்ற தாக்குதலில் 14 பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு BLA எனும் கிளர்ச்சி அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் அண்டை நாடுகளான ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லை பகுதியில் அமைந்துள்ள மாகாணம் பலுசிஸ்தான். இந்த மாகாணத்தில் பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) எனும் கிளர்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. நீண்ட வருடங்களாக பலுசிஸ்தானை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏற்கனவே ரயில் கடத்தல், பாகிஸ்தான் ராணுவம் மீது தாக்குதல் என தாக்குதல் நடத்தி வந்த BLA அமைப்பு நேற்று நடத்திய 2 தாக்குதல்களில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலானது முதலில், போலனின் மாக், ஷோர்கண்ட் பகுதியில் பாகிஸ்தான் இராணுவ வாகனம் மீது BLA-ன் STOS பிரிவு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கும் கண்ணிவெடி (IED) தாக்குதலை நடத்தியது.
இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ சிறப்பு நடவடிக்கை தளபதி தாரிக் இம்ரான் மற்றும் சுபேதார் உமர் பாரூக் உட்பட 12 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பில் பாகிஸ்தான் ராணுவ வாகனம் முற்றிலுமாக அழிக்கப்பட்டது.
மற்றொரு தாக்குதலில் கெச்சின் குலாக் டைக்ரான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் படையை BLA கிளர்ச்சியாளர்கள் குறிவைத்தனர். நேற்று (மே 7) பிற்பகல் 2.40 மணியளவில் பாகிஸ்தான் ராணுவத்தின் வெடிகுண்டு செயலிழக்கும் படை தங்கள் பணியை மேற்கொண்டிருந்தபோது முதல் தாக்குதல் போல ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும் கண்ணிவெடி வெடித்தது. இந்த தாக்குதலில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
மேற்கண்ட 2 தாக்குதல்களில் மொத்தம் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு தாக்குதல்களுக்கும் BLA அமைப்பு பொறுப்பேற்று கொண்டது.
ஏற்கனவே பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகியவற்றை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.