தமிழக அமைச்சரவையில் திடீர் இலாகா மாற்றம்! ரகுபதி to துரைமுருகன் to ரகுபதி!
தமிழக அமைச்சரவையில் சட்டத்துறையானது அமைச்சர் துரைமுருகனுக்கு மாற்றப்பட்டுள்ளது. கனிமவள அமைச்சர் பொறுப்பு ரகுபதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம் ஆண்டு துவக்க நிகழ்வு நடைபெற்றது. இன்னும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கு ஓராண்டு இருக்கும் நிலையில், தற்போது திடீரென தமிழக அமைச்சரவையில் இலாகாக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் பொறுப்பானது தற்போது அமைச்சர் ரகுபதியிடம் இருந்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அமைச்சர் துரைமுருகன் பொறுப்பில் இருந்த கனிமவள துறையானது அமைச்சர் ரகுபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் தான் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி ஆகியோர் அமைச்சர் பொறுப்பில் இருந்து விலகிய நிலையில், அவர்களது துறை வேறு அமைச்சர்களுக்கு மாற்றியமைக்கப்பட்டு, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இப்படியாக ஓரிரு மாதங்களிலேயே அதுவும் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் வேளையில் திடீரென மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவை தமிழக அரசியல் வட்டாரத்தில் உற்றுநோக்கப்படுகிறது.