விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

ரோஹித்தை தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு பெற விருப்பம் தெரிவித்ததாக தனியார் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Virat Kohli - TEST Cricket

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் ‘கிங்’ கோலி என அழைக்கப்படும் இவர் ஏற்கனவே தனது சர்வதேச டி20 கிரிக்கெட் பயணத்தை முடித்து கொண்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தார். அடுத்ததாக தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தையும் முடித்துக்கொள்ள விராட் முடிவு செய்து இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.

இது தொடர்பாக ESPN செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடித்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், இது தொடர்பாக கடந்த ஒரு மாத காலமாக பிசிசிஐ-யிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

வரும் ஜூன் 20இல் இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதனால், அந்த தொடரில் பங்கேற்று பிறகு விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவார் என்ற தகவல் வெளியாகி வருகிறது. அண்மையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஒருநாள் கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா , விராட் கோலி இணைந்து ஓய்வை அறிவித்தது போல, டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரோஹித் சர்மாவை அடுத்து விராட் கோலி ஓய்வை அறிவிக்க உள்ளார் என்ற செய்தி கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விராட் கோலி 14 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தில் 123 டெஸ்ட் போட்டிகள் விளையாடி உள்ளார். 68 டெஸ்ட் மேட்சுகளில் கேப்டனாக செயல்பட்டுள்ளார் அதில் 40-ல் வெற்றி பெற்று டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறந்த கேப்டனாக பொறுப்பேற்று இருந்தார். 46.85 பேட்டிங் சராசரி உடன் 9,230 ரன்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமே எடுத்துள்ளார் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்