பொள்ளாச்சி வழக்கு : பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் – முதல்வர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு கூடுதலாக ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

mk stalin

சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 8 பெண்களின் புகாரின் அடிப்படையில், 9 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சமீபத்தில் நீதிபதி ஆர். நந்தினிதேவி இந்த வழக்குக்கான தீர்ப்பையும் அறிவித்தார். அதன்படி கைது செய்யப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர்களுக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல, பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவருக்கும் மொத்தமாக சேர்த்து ரூ.85 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதிமன்றம் மொத்தமாக அறிவித்த ரூ.85 லட்சம் நிவாரணத் தொகையுடன் கூடுதலாக தலா ரூ.25 லட்சம் நிவாரணமாக வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிக்கையில் ” தற்போது தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கி பெண்களுக்கு பல்வேறு வகைகளிலும் அதிகாரம் அளித்திட தமிழ்நாடு அரசு சிறந்த முயற்சிகளை எடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் தோழி விடுதிகள், புதுமைப்பெண், நான் முதல்வன் போன்ற முன்னோடி திட்டங்களின் விளைவாக மாநிலத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இரண்டிலும் மாணவிகளின் சேர்க்கை அதிகரித்து உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 41 சதவீதம் பேர் இம்மாநிலத்தில் பணிபுரிகின்றனர்.

சமீபத்தில் திருத்தம் செய்து குற்றச்செயல்களுக்கான தண்டனையை மிகவும் கடுமையாக்கியுள்ளது. மேலும், இந்திய தண்டனைச் சட்டத்திலும் பெண்களுக்கு எதிரான தண்டனையை கடுமையாக்கும் விதமாக உரிய சட்டத்திருத்தத்தினை சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி ஒன்றிய அரசின் ஒப்புதலுக்காக தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்துள்ளது.

இதனால், குற்றவாளிகள் தங்கள் குற்றங்களுக்கு கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும். இவ்வழக்கில் கடந்த 13.05.2025 அன்று கோயம்புத்தூர் மகளிர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. “நியாயத்திற்காக துணிச்சலுடன் போராடிய பெண்களின் தைரியம் பாராட்டுக்குரியது. இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கியுள்ள தண்டனை, குற்றச்செயலில் ஈடுபட முனைவோருக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கும்” எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்