இஸ்ரோவின் PSLV-C61 ராக்கெட்.., ஏவுதளத்திற்கு நகர்ந்து வரும் காட்சி.! எப்போது விண்ணில் பாய்கிறது.?
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஏவுதளத்தில் பிஎஸ்எல்வி C61 ராக்கெட் நிறுத்தப்படும் காணொளியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை ஆந்திரப்பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து ஏவவுள்ளது. இந்த ஏவுகணை வாகனம் பூமியின் பெரும்பாலான மேற்பரப்பை ஆராய்ந்து கண்காணிக்க அனுமதிக்கும் மேம்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் தகவல் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய நாராயணன், ”வரவிருக்கும் PSLV-C61 ஏவுதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இது பூமியில் உள்ள பல்வேறு பொருட்களைக் கண்டறிந்து கண்காணிக்க உதவும். 100-வது ராக்கெட் இந்த ஆண்டு ஜனவரியில் ஏவப்பட்டது. இப்போது 101-வது ராக்கெட்டுக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என்று அவர் கூறினார்.
இஸ்ரோ ஒரு புதிய பயணத்தை மேற்கொள்ள உள்ளது. அதற்கு முன்பு, இந்த விண்வெளிப் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி, இஸ்ரோ ஒரு காணொளி ஒன்றை பகிர்ந்து கொண்டு, மே 18 அன்று காலை 5:59 மணிக்கு ஏவப்படுவதற்கு ஒரு படி நெருக்கமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
இஸ்ரோ குழு PSLV-ஐ அதன் 101வது ஏவுதலுக்காக பேலோட் ஒருங்கிணைப்பு வசதியிலிருந்து (PIF) ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC-SHAR இல் உள்ள மொபைல் சர்வீஸ் டவருக்கு (MST) நகர்த்தியுள்ளது.
Watch this timelapse of PSLV-C61 / EOS-09 — marking ISRO’s 101st launch — as PSLV is moved from the Payload Integration Facility (PIF) to the Mobile Service Tower (MST) at SDSC-SHAR, Sriharikota for further integration.
A step closer to launch on 18 May at 5:59 IST!#PSLVC61… pic.twitter.com/9uEI4oZzlo— ISRO (@isro) May 15, 2025
EOS-09 செயற்கைக்கோள் என்ன செய்யும்?
இஸ்ரோ PSLV-C61 மூலம் அதிநவீன EOS-09 செயற்கைக்கோளை ஏவவுள்ளது. C-band synthetic aperture ரேடார் பொருத்தப்பட்ட EOS-09, பகல் அல்லது இரவு என அனைத்து வானிலை நிலைகளிலும் பூமியின் மேற்பரப்பின் உயர் தெளிவுத்திறன் கொண்ட புகைப்படங்களை எடுக்கும் திறன் கொண்டதாகக் கூறப்படுகிறது.
PSLV C-61 ராக்கெட் 44.4 மீட்டர் உயரம் கொண்டது மற்றும் 1710 கிலோகிராம் எடையை சுமந்து செல்லும். இது நான்கு நிலைகளில் இயங்குகிறது, முதல் மற்றும் மூன்றாவது நிலைகள் கூட்டு திட எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. இரண்டாவது மற்றும் நான்காவது நிலைகள் பூமியில் சேமிக்கக்கூடிய திரவ எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. இந்த வடிவமைப்பு ராக்கெட் பூமியிலிருந்து 529 கிலோமீட்டர் வரை பயணிக்க அனுமதிக்கிறது.
EOS-09 ஒரு C-band செயற்கை துளை ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் வானிலை நிலைமைகளைப் பொருட்படுத்தாமல், பகல் மற்றும் இரவு நேரங்களில் பூமியின் விரிவான படங்களைப் பிடிக்க உதவுகிறது. இத்தகைய திறன்கள் பல்வேறு கண்காணிப்பு பயன்பாடுகளுக்கு அவசியம். இந்த உயர் தெளிவுத்திறன் புகைப்படங்கள் எல்லைப் பாதுகாப்பு, விவசாய கண்காணிப்பு, வனப் பாதுகாப்பு, வெள்ள எச்சரிக்கைகள் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவற்றை மேம்படுத்த உதவுகிறது.