சொல்ல வார்த்தையே இல்ல…சசிகுமாருக்கு கால் செய்து வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!
டூரிஸ்ட் ஃபேமிலி' படத்தை பார்த்துவிட்டு ரஜினிகாந்த் பாராட்டியாக நடிகர் சசிகுமார் உற்சாகத்துடன் நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளிட்டுள்ளார்.

சென்னை : நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் பெரிய அளவில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த காரணத்தால் வசூல் ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிபெற்றுள்ளது என்று சொல்லலாம். இதுவரை வசூல் செய்துள்ளதாக கிடைத்த தகவலின் படி படம் 40 கோடிகள் வரை வசூல் செய்து ரெட்ரோ படத்தின் வசூலை முறியடித்துள்ளது.
இன்னும் படம் வெற்றிகரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், படத்தை பார்த்துவிட்டு மக்கள் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மக்களை போல சினிமா பிரபலங்கள் பலரும் படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி வருகிறார்கள். கடைசியாக, நடிகர் சிவகார்த்திகேயன் படத்தினை பார்த்துவிட்டு படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்.
அவரைத்தொடர்ந்து எந்த சிறப்பான படங்கள் வெளியானாலும் அந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டும் நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் படத்தினை டூரிஸ்ட் ஃபேமிலி பார்த்துவிட்டு சசிகுமாருக்கு போன் செய்து பாராட்டி பேசியிருக்கிறார். இது குறித்து நன்றி தெரிவித்து உற்சாகத்துடன் சசிகுமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் ” ‘படம் சூப்பர்’ என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். ‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, “சூப்ப்ப்பர் சசிகுமார்…” என அழுத்திச் சொன்னார்.
“தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்…” என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்…” என மகிழ்ச்சியுடன் சசிகுமார் தெரிவித்துள்ளார்.
View this post on Instagram